தூத்துக்குடி: வழக்கறிஞருக்கும் புகார்தாரருக்கும் இடையே நடந்த மோதலில் போதையில் இருந்த புகார்தாரர் பேருந்தின் முன் அமர்ந்து இன்று (03.08.2023) போராட்டத்தில் ஈடுபட்டதால் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாயைச் சேர்ந்தவர், சுடலை முத்து. இவரது உறவினர் மாயாண்டி. இருவருக்கும் இடையே கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தகராறு குறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அதே பகுதியில் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருபவர், தேவ கண்ணன். இவர் இந்த வழக்குத் தொடர்பாக மாயாண்டிக்கு ஆதரவாக ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வந்தார். இந்த நிலையில் மாயாண்டியிடம் பணம் பெற்றுக்கொண்டு எதிர் தரப்பினருக்கு சாதகமாக நீதிமன்றத்தில் தேவ கண்ணன் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதனால் இன்று தேவ கண்ணனுக்கும் மாயாண்டிக்கும் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்திற்கு வெளியே வாக்குவாதம் நடந்துள்ளது. வாக்குவாதம் முற்றவே இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பின்னர், அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் மாயாண்டி குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. சிகிச்சை முடிந்து வெளியே வந்த மாயாண்டி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அந்த வழியாக வந்த தனியார் பேருந்தின் டயர் முன் அமர்ந்து வழக்கறிஞர் தேவ கண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின் அங்கிருந்த ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதனால் சுமார் அரை மணி நேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இருவரையும் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.