தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் ஒன்பதாவது தெருவைச் சேர்ந்தவர் பாண்டி. நியாயவிலைக்கடை ஊழியரான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மகேஷ்வரி 16 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதனைத்தொடர்ந்து மகேஷ்வரியின் சகோதரி கோகிலாவை பாண்டி இரண்டவதாக திருமணம் செய்தார். முதல் மனைவிக்கு கவிதா என்ற பெண், மணிகண்டன் என்ற மகனும், 2ஆவது மனைவிக்கு மகேந்திரன் என்ற மகனும் உள்ளனர். இதில், மூத்த மனைவியின் மகள் கவிதாவிற்கு திருமணமாகிவிட்டது.
இதற்கிடையில் பாண்டி இறப்பிற்காக அரசு, பணிக்கொடை பணம் ரூ.2 லட்சத்தை சமீபத்தில் கோகிலாவிடம் வழங்கியது. இந்த பணத்தினை அவர்களுக்குள் பங்கீட்டு கொள்வதில் முரண்பாடு ஏற்பட்டு பிரச்னை எழுந்ததாக தெரிகிறது. கடந்த சிலமாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கில் சிறை சென்றிருந்த மணிகண்டன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் பிணையில் வெளியே வந்துள்ளார்.
வெளியே வந்ததும் தனது சித்தியிடம் பணத்தினை கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு நாளுக்கு முன்பு கோகிலாவின் மகன் மகேந்திரன் பள்ளி சுற்றுலா சென்றுள்ளார். இன்று காலையில் சுற்றுலா சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய மகேந்திரன், வீட்டில் தனது தாய் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
தகவலறிந்து வீட்டிற்குள் வந்த உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெபராஜ், மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துகோகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு விசாரணை நடத்தியதில், கோகிலாவை வீட்டிலிருந்த மரச்சேரை உடைத்து, மரக்கட்டையினால் அடித்து கொலை செய்ததது மணிகண்டன் தான் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நீட் மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு ரத்து - திமுகவின் முடிவு என்ன?