தமிழ்நாடு: தசரா, இந்தியா முழுவதும் இதே பெயரில் ஒரே நாளில் கொண்டாடப்படும் திருவிழா ஆகும். ஆனால் ஒவ்வொரு பகுதிக்கும் அதற்கே உரிய தனித்துவத்துடன் கவனத்தை ஈர்க்கிறது. தமிழ்நாட்டின் கடைக்கோடி பகுதியான தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோயில் தசரா பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது.
10 நாட்கள் நடைபெறும் தசரா பண்டிகையின் இறுதி நாளில் குலசேகரன்பட்டினத்திற்குள் காலடி எடுத்து வைத்தோம். கோயிலிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வெளியே வாகனங்கள் நிறுத்தப்பட்டு அதன் பின்னர் பக்தர்கள் அனைவரும் நடந்தே செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஊருக்குள் கோயிலை நோக்கி செல்ல ஒருவழி, வெளியேற மற்றொரு வழி என ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நண்பகல் 12 மணியளவில் கோயிலை நோக்கி நடக்கும் போதே வேடமணிந்த பக்தர்கள் கோயிலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒலிப்பெருக்கியில் பேசியவர், தற்போது கால் பகுதி கூட்டம் தான் வந்திருக்கிறது என அறிவித்தார்.
காணும் இடமெல்லாம் காளி: அவர் கூறியதன் பொருள் சற்று நேரத்திற்கெல்லாம் உரைக்கத் துவங்கியது. ஊரில் எங்கு திரும்பினாலும் காளிவேடம் அணிந்த பக்தர்கள் வலம் வரத் துவங்கினர். பள்ளத்தை நோக்கி பாயும் நதியைப்போல குலசையின் தெருக்களில் கூடிய கூட்டம், முத்தாரம்மன் கோயிலை நோக்கியும், பின்னர் கடற்கரையை நோக்கியும் பாயத் துவங்கியது.
கையில் தீச்சட்டியை ஏந்தியவாறு உக்கிரமாக ஆடிக்கொண்டிருந்த காளிவேடமணிந்த பக்தர்கள் கடற்கரையை நோக்கி பாயத் துவங்கினர். அவர்களுடன் பயணித்து இறுதி இலக்கை அடைந்தோம். தீச்சட்டியை கடற்கரையில் இறக்கி வைத்து ஆவேசத்தை தணித்துக் கொண்டிருந்தனர். தூத்துக்குடியிலிருந்து வந்திருந்த சிவசக்தி தசராக்குழுவிடம் பேச்சு கொடுத்தோம்.
இது பற்றி பேசிய அவர்கள், ஒவ்வொரு தசராக்குழுவிற்கும் குருசாமி என்றொருவர் இருப்பார். அவர் தான் அந்த குழுவிற்கு வழிகாட்டியாக இருப்பார். தசரா விரதம் என்பது 41 நாட்கள் முன்பிருந்து துவங்கும். அசைவம் சாப்பிடாமல், மது உள்ளிட்ட பழக்கங்களை தவிர்த்து 41 நாட்களும் கடுமையான விரதம் இருப்போம் என கூறும் அவர்கள், கடந்த இரு ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகளுக்குப் பின் தற்போது கோயிலுக்கு வர அனுமதித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறினர்.
ஒவ்வொருவரும் வேடங்களுக்காக சில நூறு ரூபாய்களிலிருந்து பல ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்கின்றனர். அம்மன் வேடமிடுபவர்கள் கடுமையான சிரத்தையுடன் பொம்மையிலான கைகள், நெற்றிப்பட்டயம், கண்கள் உள்ளிட்டவற்றை அணிந்து வேடமிடுகின்றனர். கடந்த ஆண்டுகளில் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியுள்ளதாகவும், இதன் காரணமாகவே தொடர்ந்து வேடமிடுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.
மும்பை புகைப்படக் கலைஞர்:தூத்துக்குடியிலிருந்து வந்திருந்த பக்தர் ஒருவர் உடல் முழுவதும் , பொருத்தப்பட்டிருந்த தீபங்களை ஏற்றியவாறு ஆடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்த்து. பக்தர்கள் மட்டுமின்றி தசரா திருவிழா நாடு முழுவதும் இருந்து புகைப்பட கலைஞர்களையும் ஈர்த்துள்ளது. மும்பையிலிருந்து குலசை திருவிழாவை கேள்விப்பட்டு வந்திருந்தார் மனோஜ் பாட்டீல் எனும் புகைப்பட கலைஞர். குலசை தசரா திருவிழாவிற்கு முதன்முறை வந்திருப்பதாக கூறும் இவர், இந்த இடம் தனது மனதுக்கு நெருக்கமாக இருக்கும் என கூறுகிறார்.
ஆர்வத்துடன் குலசை நோக்கி வரும் மக்களை உள்ளூர் மக்கள் ஆர்வத்துடன் வரவேற்கின்றனர். மிகச்சிறிய குக்கிராம்மான குலசேகரன்பட்டினம் தசரா நாட்களில் மட்டுமே இவ்வளவு பெரிய மக்கள் திரளை சந்திக்கிறது. இன்னும் 2 நாட்களில் இந்த ஊர் பழையபடி வெறிச்சோடி விடும் என்கிறார் குலசையைச் சேர்ந்த ஆறுமுகம்.
தென்மாவட்டங்களை பூர்வீகமாக கொண்டு தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தசரா ஒரு கொண்டாட்டத்தின் வடிவம். தீபாவளி பொங்கலுக்கு கூட ஊருக்கு வராமல் வேலை செய்வோம். ஆனால் தசராவுக்கு வந்துவிடுவோம் என்கிறார் சென்னையில் மளிகைக்கடை வைத்திருக்கும் செல்வம்.
இவ்வளவு பெரிய பண்டிகை நடைபெறும் பகுதியில் வன்முறை அசம்பாவித சம்பவங்களுக்கு இடம் அளிக்காமல் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருந்தன. பக்தர்கள் இரும்பினால் ஆன ஆயுதங்களை கொண்டுவர தடை விதிக்கப்பட்டிருந்தது. சாதிகளை குறிப்பிடும் கொடிகளுடன் வந்த இளைஞர்களிடமிருந்து கொடிகளை போலீசார் பறித்துவிட்டு எச்சரித்து சென்றதை பார்க்க முடிந்த்து. குலசை நகரில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் கூறினார்.
இதையும் படிங்க:Video: அண்ணன் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம்