தூத்துக்குடி மாவட்டம் கார்கில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட முப்படை வாரிய மாவட்ட தலைவர் கர்னல் சுந்தரம் தலைமைத் தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு படைவீரர்கள் சங்கத் தலைவரும் முன்னாள் இந்திய கடற்படை அலுவலருமான மூர்த்தி ஆனந்தன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், "தற்போது யார் யாரோ முதல்வராகிறார்கள். 60 வயது வரை நடித்துவிட்டு அதன்பின்பு தலைவராகவேண்டும் என முயற்சி செய்கிறார்கள். ஆனால் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு 50 வயது நிறைவடைந்து ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் அதன் பின்பு செக்யூரிட்டி வேலைக்குத்தான் செல்கின்றனர். அதுதான் அவர்களுடைய நிலைமையாக உள்ளது. ஆனால் நடிகர்கள் 60 வயதுவரை நடித்துவிட்டு அதன்பின்பு அவருக்கு திடீரென நாட்டின் மீது பற்று ஏற்பட்டதுபோல் நடிக்கிறார்கள். உடனே முதலமைச்சருக்குப் போட்டியிடுகிறேன் என்றோ பிரதமருக்குப் போட்டியிடுவேன் என்று கூறுகின்றனர். நடிகருக்கு நடிக்கத்தான் தெரியும். மாணவர்களாகிய நீங்கள் நம்ப வேண்டியது ராணுவ வீரர்களையும் விவசாயிகளையும்தான்" என கூறினார்.
இதைத்தொடர்ந்து கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ மாணவிகள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மலர்தூவி ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை உருவாக்க வேண்டும் என உழைக்கும் திமுக...!' - பாஜக சாடல்