தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மத்திய, தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை சார்பில் சுகாதாரத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கு கோவில்பட்டி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் கிருஷ்ணலீலா தலைமை வகித்தார். இதில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு மருத்துவ முகாமைத் தொடங்கிவைத்தார்.
விழாவில் பேசிய கனிமொழி, “நகர்ப்புறங்களில் இருப்பவர்களுக்கு மருத்துவ வசதி எளிதில் கிடைக்கும். மருத்துவ வசதி கிடைக்காத கிராம மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வரும்முன் காப்போம் என்ற திட்டத்தினை உருவாக்கினார். கிராமங்களுக்கு மருத்துவம், மருத்துவர்களைக் கொண்டு சேர்த்த திட்டமும் அந்தத் திட்டம்தான். ஆனால், இன்று வேறு பெயர்களில், வேறு வடிவங்களில் நடத்தப்படுகிறது.
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் உங்கள் உடல்நலத்தினைப் பாதுகாத்து ஆரோக்கியமாக இருப்பதுதான் உங்களுடைய குழந்தைகளுக்கு தரக்கூடிய பரிசு, சொத்து எல்லாம். உங்களால்தான் உங்கள் குடும்பத்தினை, குழந்தைகளைக் காப்பாற்ற முடியும். பள்ளிகளில் பயிலும் பெண்கள், இளைஞர்களுக்கு அதிகளவில் ரத்த சோகை உள்ளது. சத்தான உணவுகளை நாம் சாப்பிடுவதில்லை. அதனால்தான் இவ்வாறு நோய்கள் ஏற்படுகின்றன.
நம்மிடம் பணம், வசதி எல்லாம் இருந்தாலும் உடல்நலமும் ஆரோக்கியமும்தான் சொத்து. என்னுடைய தந்தை 90 வயதிலும் ஆரோக்கியத்துடன் இருந்த ஒரு தலைவர். நாங்கள் அவரிடம் பல விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளோம். கடைசி வரை மக்களுக்கு பணியாற்றக்கூடிய உடல் நலமும் மன உறுதியும் கொண்டவர் அவர். உழைப்பது மட்டுமின்றி, உடல் நலத்திலும் அக்கறை கொண்ட காரணத்தினால்தான் 90 வயதிற்கு மேலும் அவரால் பணியாற்ற முடிந்தது” என்றார்.
இதையும் படிங்க: ராஜ்யசபா எம்.பி. பதவி - பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார் பிரேமலதா!