தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் வெள்ளம்போல் வீடுகளைச் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை நேற்று நேரில் சென்று பார்வையிட்டிருந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பைப் பார்வையிட்டார்.
அப்போது பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசிய கனிமொழி, மழை வெள்ளத்தை வெளியேற்ற மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளரைச் சந்தித்து பேசிய அவர், '' உள்ளாட்சித் தேர்தல் நடப்பது வரவேற்கத்தக்க நிகழ்வு. தேர்தல் நடக்க வேண்டும் என்று தான் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இன்னமும் பல குழப்பங்கள் உள்ளதால், அவற்றைச் சரிசெய்து விட்டு தேர்தலை அறிவித்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
மழையால் தமிழ்நாட்டில் பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இவ்வளவு மழை பெய்தும் மழை நீர் அனைத்தும் வீணாகக் கடலில் கலப்பது கவலையளிக்கிறது. இதற்கென்று அரசாங்கம் எந்தத் தீர்வும் செய்யவில்லை. தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீரை வெளியேற்றுவதில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தவில்லை. நீர் சீராக பாய்வதற்கு, வாய்க்கால்களைக் கூட சரியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வில்லை. தமிழ்நாடு முழுவதும் இதே நிலைமைதான் உள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களை அரசாங்கமோ, அமைச்சர்களோ நேரில் வந்து சந்திக்கவில்லை. மக்களின் குறைகளைச் சரி செய்வதற்கும் பிரச்னைகளை தீர்ப்பதற்கும் அவர்கள் தயாராக இல்லை என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் அவர்களுக்கு சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் '' என்றார்.
இதையும் படிங்க: கடலூரில் சுவர் இடிந்து உயிரிழந்த குடும்பத்திற்கு ஸ்டாலின் நிதி உதவி!