தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இறுதிகட்ட தேர்தல் பரப்புரை நடைபெற்றுவருகிறது. அதன்படி, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி இன்று காலை முதலே தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். அப்போது தூத்துக்குடி வட்டகோவில் சந்திப்பில் அவர் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தபோது,
"இந்த தேர்தல் நமது அடையாளம், சமூக நீதி, சுயமரியாதைக்கு வைத்திருக்கும் சோதனை. இந்தத் தேர்தலை போராட்டக்களம் என்று சொன்னால் அது மிகையாகாது. சமூகத்தில் மக்களுக்கு மரியாதை, சம உரிமை கிடைக்க வேண்டும் என நாம் போராடிக் கொண்டு வருகிறோம். ஆனால் இதற்கு எதிரானவர்களை சிவப்புக் கம்பளம் விரித்து அதிமுக அழைத்து வந்திருக்கிறது.
சமூக வலைதளங்களில் 'பேக் அப் மோடி' (#PackUpModi) என்னும் சொல்தான் தற்போது பிரபலமாகிவருகிறது. இதற்கான அர்த்தம், மோடி தனது ஆட்சியை மூட்டை கட்டிக்கொண்டு வீட்டுக்குப் போக வேண்டும் என்பதுதான். மோடியை வீட்டுக்கு அனுப்பினால் போதும்... இங்கிருக்கும் எடப்பாடி ஆட்சியும் வீட்டிற்குச் சென்றுவிடும். எனவே மோடியை வீட்டிற்கு அனுப்பிவைக்கும் வெற்றியை தூத்துக்குடியில் மக்கள்தான் தரவேண்டும்.
தூத்துக்குடியில் சூரியனுக்கு மட்டும்தான் இடம் உண்டு. அடிக்கிற வெயிலுக்கு கடலில் இல்லை, தாமரை எங்கும் மலராது கருகி போய் விடும். உச்சியில் தகித்துக் கொண்டிருக்கும் சூரியனின் உக்கிரம் போல் மக்களின் மனதிலும் கோபம் உள்ளது. ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என அமைதியாக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை சுட்டுக்கொலை செய்தனர்.
திமுக ஆட்சி அமைந்ததும் 13 பேரின் கொலை விவகாரத்தில் நியாயம் வழங்கப்படும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்போம்.
தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தாத நல்ல தொழிற்சாலைகள் கொண்டுவரப்படும். மக்களுக்கு பயன் தரக்கூடிய ஆலைகள் அமைக்கப்படும். வங்கியில் ஐந்து சவரனுக்கு குறைவான நகைகளை அடகு வைத்து பெற்ற நகைக்கடன் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
இந்தத் தேர்தலில் நாற்பதும் நமதே, நாடும் நமதே, தமிழ்நாடும் நமதே என மாற்றிக் காட்ட வேண்டும்" என்றார்.