கரோனா பெருந்தொற்றால் ஈரான் நாட்டில் சிக்கியிருந்த 687 இந்தியர்கள் சமுத்திர சேது திட்டத்தின் கீழ் ஐ.என்.எஸ்.ஜலஸ்வா கப்பல் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் வெப்பம் உணர்த்தும் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது. குடியுரிமை அலுவலர்களின் சோதனையைத் தொடர்ந்து அரசுப் பேருந்துகள் மூலம் அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இவர்கள் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இந்தப் பணிகளை ஆய்வுசெய்த தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழ்நாடு அரசு மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கும். கரோனாவைக் கட்டுப்படுத்த அரசு 24 மணி நேரமும் செயல்பட்டுவருகிறது. தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்திற்கு மாநில அரசின் பங்கு மகத்தானது. 2018ஆம் ஆண்டில் இடம் கையகப்படுத்தி அதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டார். தூத்துக்குடி விமான நிலையம் விரைவில் பன்னாட்டு விமான நிலையமாக மாறும். சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணை செய்யப்படவேண்டும் என்பதற்காக சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றார்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் லாக்கப் மரணம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!