தூத்துக்குடி: கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலின்போது, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தினால் பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி அனைத்து வார்டுகளுக்கான தேர்தலை ரத்து செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதனையடுத்து கடந்த 20 ஆம் தேதி கடம்பூர் முதல் நிலை பேரூராட்சிக்கான 9 வார்டுகளில் மட்டும் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் மறு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இன்று (செப் 29) கடம்பூர் பேரூராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது.
கடம்பூர் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 1,185 ஆண் வாக்காளர்கள், 1,285 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 2,470 வாக்காளர்கள் உள்ளனர். 1வது வார்டில் எஸ்.வி.எஸ்.பி. நாகராஜா, 2 வது வார்டில் ராஜேஸ்வரி, 11வது வார்டில் சிவகுமார் ஆகியோர் சுயேச்சையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மற்ற 9 வார்டுகளில் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கடம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஐந்து பள்ளிகளில் ஒன்பது வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
மணியாச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் தலைமையில் மூன்று காவல் ஆய்வாளர்கள் உள்பட பத்துக்கு மேற்பட்ட காவல் உதவி ஆய்வாளர் என 120க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கயத்தாறு வட்டாட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் 100க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்களும் இந்த தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தீண்டாமை வன்கொடுமை...மாவட்ட ஆடசியர் விசாரணை நடத்த உத்தரவு