தூத்துக்குடி: சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தூத்துக்குடி விமானநிலையம் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்கள், விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடியிருக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சில பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்கிறார். ஆனால் பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படுகின்ற ஒரு பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல அவருக்கு மனமில்லை.
சேலம் 8 வழி சாலை திட்டத்தை கண்மூடித்தனமாக திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்த்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்போது 8 வழி சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது. 2047ஆம் ஆண்டில் நாட்டின் கட்டமைப்பு உலக தரத்திற்கு உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி உழைத்து கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயிருக்கிறது. ஜெயிலருக்கு பாதுகாப்பில்லை, போலீஸ்காரர்களுக்கு பாதுகாப்பில்லை. சென்னையில் தங்க நகைகள் அணிந்து போக முடியவில்லை. தமிழ்நாடு முழுவதும் கஞ்சா பரந்து விரிந்து விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாடு அரசு உடனடியாக இதில் தலையிட்டு சட்ட ஒழுங்கை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையாக தண்டனை கொடுக்கப்படவேண்டும். இந்தியா 8 ஆண்டுகளில் சுகாதாரமான நாடாக மாறி இருக்கிறது. இந்தியா இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது, வளர்ந்து கொண்டு இருக்கின்ற பொருளாதாரத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் நாடாக இருக்கிறது என்றார்.
இதையும் படிங்க: பாரதமாதா நினைவாலயத்தின் பெயர் மாற்றப்படவில்லையெனில் போராட்டம்... பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம்...