குமரி மாவட்டம், களியக்காவிளை சந்தைரோடு சோதனைச் சாவடியில், கடந்த 8ஆம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக திருவிதாங்கோடு, அடப்புவிளை பதார் தெருவைச் சேர்ந்த அப்துல் சமீம், நாகர்கோவில் கோட்டார், மாலிக்தினார் நகர் ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த தவுபிக் ஆகிய இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அவர்கள் இரண்டு பேரும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. தற்போது அவர்களை காவல் துறையினர் பத்து நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படியுங்க: 'எஸ்ஐ வில்சனை இப்படித்தான் கொன்றோம்...!' - நடித்துக்காட்டிய கொலையாளிகள்
இந்த வழக்குத் தொடர்பாக குமரி மாவட்ட காவல் துறையினர் 12 பேர் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்திற்கு வந்தனர். அவர்கள் காயல்பட்டினம் சீதக்காதி நகரில் உள்ள முகைதீன் பாத்திமா என்பவர் வீட்டுக்குச் சென்றனர். அப்போது வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தவுபிக்கையும் காவல் துறையினர் உடன் அழைத்து வந்தனர்.
விசாரணையில், முகைதீன் பாத்திமாவை முதல் கணவர் பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த நவாஸ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நவாசுக்கும், உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான இருவருக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வில்சனைக் கொலை செய்வதற்கு முன்பாக அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரை நவாஸ் காயல்பட்டினத்தில் உள்ள முகைதீன் பாத்திமா வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அவர்கள் அங்கு தங்கியிருந்து சாப்பிட்டுச் சென்றுள்ளனர்.
இதன் அடிப்படையில் இந்தக் கொலை வழக்கில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்பதால் குமரி மாவட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தியதாகத் தெரிய வந்துள்ளது.
30 நிமிடங்கள் இந்த விசாரணை நடந்துள்ளது. அதன் பின்னர் காவல்துறையினர் தவுபிக்கை மீண்டும் நாகர்கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படியுங்க: வில்சன் கொலை வழக்கு: என்.ஐ.ஏ. அலுவலர்கள் குற்றவாளிகளிடம் விசாரணை