கரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்திவருகிறது. அதனால் உலகம் முழுவதும் இதுவரை 85 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்திற்கும் அதிகமனோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல தமிழ்நாட்டிலும் 52 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 625 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன் காரணமாக தமிழ்நாடு அரசு கரோனா வைரஸின் பாதிப்பைக் கருத்தில்கொண்டும், மாணவர்களின் நலனுக்காகவும் 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து, அனைவரையும் "ஆல்பாஸ்" என அறிவித்தது. அதனால் மாணவர்களின் பொதுத்தேர்வு இறுதி மதிப்பெண் பட்டியலுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் 80 விழுக்காடும், வருகைப்பதிவின் அடிப்படையில் 20 விழுக்காடும் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பளித்து வருகின்றனர். இந்த சூழலில் அரசின் இந்த முடிவு குறித்தும், நன்றாக படிக்கக்கூடிய மாணவர்கள், சரியாகப் படிக்காத மாணவர்கள், படிப்பின் மீது அக்கறை காட்டாத மாணவர்கள் உள்ளிட்டோரின் மனநிலை குறித்தும் பிரபல மனோத்தத்துவ மருத்துவர் சிவசைலம் என்ன கூறுகிறார் என்பதை பிரத்யேக பேட்டி மூலம் காணலாம்.
அவர், "10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. ஏனெனில் தமிழ்நாட்டில் சராசரியாகப் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். அதில் 95 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். மீதமுள்ள ஐந்து விழுக்காடு மாணவர்கள் தேர்வில் தோல்வியைத் தழுவுகின்றனர். தற்போது இந்தக் கரோனா அச்சுறுத்தலை முன் நிறுத்தி 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது, மாணவர்களுக்கு நன்மையே.
அதேபோல அரசின் இந்த முடிவு, நன்றாக படிக்கக்கூடிய மாணவர்களிடையே சற்று சலசலப்பை ஏற்படுத்துவதும் ஏற்றுக்கொள்ள கூடியதுதான். ஆனால் அதனை மாணவர்களால் நிவர்த்தி செய்ய முடியும். எப்படி என்றால் மாணவர்களின் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் காலாண்டு, அரையாண்டு, வருகை பதிவின் அடிப்படையில் கணக்கிடப்படுவதால் நன்றாக படிக்கக்கூடிய மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். அதனால் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பாதிப்பை ஏற்படுத்தாது.
அதையடுத்து மற்றொருபுறம் நன்றாக படிக்காத மாணவர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு வரவேற்பைப்பெறும். ஏனெனில் அரசுத் துறை வேலைகள் அனைத்துக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடிப்படை தேவை. ஆகவே சரியாக படிக்க இயலாத மாணவர்கள் கூட தற்போது பாஸ் ஆவதன் மூலம் அவர்கள் அரசுத் தேர்வை எழுத தகுதியானவர்கள் என்ற நிலையை அடைகிறார்கள்.
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களில் ஆண்டுக்கு சராசரியாக 5 விழுக்காட்டினர் தோல்வியை தழுவும் நிலை தற்போது இல்லாமல் போகிறது. அதனால் அவர்களின் மனம் திடப்பட்டு மேல் படிப்பிற்கு அது உந்துகோலாக இருக்கும். அதற்கு முந்தைய ஆண்டு சூழல்களில் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள் அதற்கு மேல் படிப்பை தொடர விருப்பமில்லாமல் பல்வேறு விதங்களில் கூலி வேலைகளுக்கு சென்று தங்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைத்திருப்பார்கள்.
தற்போது அது தவிர்க்கப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவதால் சராசரியாக படிக்கக்கூடிய மாணவர்கள் முதல் சரியாக படிக்க இயலாத மாணவர்கள் வரை தங்களின் அடுத்த கல்வித்திட்ட பயணங்களை தெளிவாக வகுத்துக் கொள்வார்கள். பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பது தொழில் கல்வி பயில்வதற்கு அடிப்படை அம்சமும் கூட என்பதால் பத்தாம் வகுப்பில் சரியாக படிக்காத மாணவர்கள் இந்த தேர்ச்சியின் மூலமாக தங்களை ஒரு தொழில்முனைவோராக மாற்றிக் கொள்வதற்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாடு அரசு கடைசி நேரத்தில் பொதுத்தேர்வை ரத்து செய்து அறிவித்திருந்தாலும் இந்த முடிவு முழுவதும் நன்மை அளிக்கக் கூடியதே" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஆதிச்சநல்லூரில் 115 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வுப் பணிகள்' - சந்தீப் நந்தூரி தகவல்!