கரோனா தொற்றின் பரவல் காரணமாக, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான அளவில் ஆக்ஸிஜன் இல்லை. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், நாடு முழுவதும் நோயாளிகள் பலர் உயிரிழந்துவருகின்றனர்.
இந்த நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்திக்காக, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இத்தீர்ப்பை கண்டித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் உள்ள பண்டாரம்பட்டி, புதுத்தெரு உள்ளிட்ட இடங்களில் மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஆன்ஸ் தலைமையில், புதுதெரு பகுதி மக்கள் இரவில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே, போராட்டக்காரர்கள் தற்காலிகமாகப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இது தொடர்பாக நாளை(ஏப்.28) அவர்கள், மாவட்ட ஆட்சியரை சந்திக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.