கரோனா முன்னெச்சரிக்கையாக வான் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நாடுகளிலும் சிக்கியுள்ள இந்தியர்களை சமுத்திர சேது என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு அழைத்துவரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதன்படி, கல்வி, வேலைவாய்ப்பு, சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக மாலத்தீவு சென்ற இடத்தில் கரோனா ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் சிக்கித்தவித்த தமிழர்கள் உள்பட இந்தியர்கள் 700 பேர் ஐ.என்.எஸ். ஜலஸ்வா இந்திய கடற்படை கப்பல் மூலமாக இன்று தூத்துக்குடி துறைமுகம் அழைத்துவரப்பட்டனர்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் நிலக்கரி இறங்குதளத்தில் அனுமதிக்கப்பட்ட கடற்படை கப்பலிலிருந்து ஒவ்வொருவராக தகுந்த இடைவெளியுடன் தரையிறக்கப்பட்டனர். இந்த கப்பலில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஜபல்பூர், டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியனைச் சேர்ந்தவர்கள் உள்பட 700 பயணிகள் வந்தனர்.
தொடர்ந்து அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களது உடைமைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும், குடியுரிமை அதிகாரிகள் சோதனைக்கு பிறகு அவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, அறிகுறி உள்ள நபர்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியுரிமைத் துறை அதிகாரிகளின் சோதனை அடுத்து சென்னை, தமிழ்நாட்டின் பிற பகுதிகளை சேர்ந்த நபர்கள் பஸ்கள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
அதுபோல வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் தூத்துக்குடியிலேயே முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்களின் முதல்நிலை மற்றும் இரண்டாம்நிலை கரோனா பரிசோதனை முடிவுகளை பொறுத்து அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதுபோல வருகிற 21ஆம் தேதி ஈரானிலிருந்து இந்தியர்களை தூத்துக்குடி துறைமுகத்திற்கு இந்திய கடற்படை கப்பல் அழைத்து வருகிறது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன” என்றார்.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி