தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணைய அலுவல் மாதம்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தார்.
அதன்படி ஏற்கனவே 21 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, 517 பேரின் வாக்குமூலமும், 679 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டன. 22ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அலுவலர் அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 23ஆம் தேதி தொடங்கி இன்று (நவ.27) வரை நடைபெற்றது. இதில் அரசு அலுவலர்கள், தீயணைப்பு துறையை சேர்ந்தவர்கள் என மொத்தம் 30 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, இன்று 5ஆவது நாளாக விசாரணை நடந்தது. இதுவரை மொத்தம் 27 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒருநபர் ஆணைய வழக்கறிஞர் கூறுகையில், "துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 22ஆவது கட்டமாக விசாரணையில், 30 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் 9 பேர், தீயணைப்பு துறையை சேர்ந்த 18 பேர் சாட்சி அளித்தனர். இதுவரை 544 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி, 724 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்தக்கட்டமாக வருகின்ற டிச. 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை விசாரணை நடைபெறும்.
சம்பவம் நடந்த சமயத்தில் இருந்த ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள். இச்சம்பவம் தொடர்பாக இன்னும் 400 பேருக்கு மேல் விசாரணை நடத்தப்பட உள்ளது. கரோனா காரணமாக 8 மாதமாக சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டது. இல்லையென்றால் தற்போது விசாரணை முடியும் தருவாயை எட்டியிருக்கும்" என்றார்.
இதையும் படிங்க: தமிழர்களுக்கான தேசத்தைக் கட்டியெழுப்ப மாவீரர் நாளில் உறுதியேற்போம் – சீமான் சூளுரை