2013ஆம் ஆண்டு அக்டோபர் 29 அன்று தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை காவல் நிலையத்துக்குட்பட்ட வாகைக்குளம் அருகே அந்தோணி பாண்டியன், ஷியாம்ராஜ் என்ற இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக யேசுதாஸ், இமானுவேல், வரதராஜன் மற்றும் பரமசிவம் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
முன் விரோதம்: யேசுதாஸ் - இன்ஸ்பெக்டர் செல்வம்
இந்த இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இமானுவேல்தான் இன்ஸ்பெக்டர் செல்வத்துக்கு யேசுதாஸ் மீது விரோதம் ஏற்பட மையப்புள்ளியாக இருந்திருக்கிறார். இமானுவேலின் மாமியார் பிச்சையம்மாளுக்கு சொந்தமாக 36 லட்சம் ரூபாய் மதிப்புடைய நிலம் ஒன்று இருந்தது. 2013ஆம் ஆண்டு இதை அந்தோணி பாண்டியனுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு விற்கச் சொல்லி இன்ஸ்பெக்டர் செல்வம் என்பவர் வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக நடந்த கட்டப் பஞ்சாயத்தில் இன்ஸ்பெக்டர் செல்வத்துக்கு எதிராக இமானுவேலுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார் யேசுதாஸ். இதனால் அவர் மீது செல்வம் கோபத்தில் இருந்திருக்கிறார்.
இப்படியான சூழலில், அந்தோணியும் அவரது நண்பர் ஷியாம்ராஜும் 29 அக்டோபர் (2013) இரவு அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதுதான் யேசுதாஸை பழிதீர்க்க சரியான நேரம் என கருதிய செல்வம், இந்த இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிகளாக யேசுதாஸ் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களான இமானுவேல், வரதராஜன் மற்றும் பரமசிவம் ஆகிய நான்கு பேரையும் சேர்த்தார்.
இன்ஸ்பெக்டர் செல்வம் பொறுப்பில் யேசுதாஸ்
அக்டோபர் 30 (2013), காலை 8 மணியளவில் இரட்டைக் கொலை தொடர்பாக யேசுதாஸை கைது செய்ய வேறு ஒரு இன்ஸ்பெக்டர் வந்திருக்கிறார். கைது செய்து அழைத்துச் செல்லும் வழியிலேயே தட்டப்பாறை காவல் நிலைய பொறுப்பையும் கவனித்து வந்த இன்ஸ்பெக்டர் செல்வத்திடம் யேசுதாஸ் ஒப்படைக்கப்பட்டார்.
லாக்கப் டார்ச்சர் பற்றி யேசுதாஸ் விவரிக்கிறார்:
நான் சொன்னதை கேட்டிருந்தால் உனக்கு இப்படி நடந்திருக்காது என இன்ஸ்பெக்டர் செல்வம் கூறினார். நான் புதுக்கோட்டை காவல் நிலையத்தின் உள்ளே சென்றதுமே என் காதைச் சேர்த்து ஒரு அறை விழுந்தது, எனக்கு இன்றுவரை அந்தக் காது கேட்காது. ஒரு காவலர் என்னை நெஞ்சோடு மிதித்து தள்ளிவிட்டார். இரண்டு காவலர்கள் என் இரண்டு கால்களிலும் ஏறி நின்றனர். மூன்று லத்தி உடையும்வரை என்னை கொடூரமாக தாக்கினார்கள்.
இடது கையில் ரத்தம் வழிந்தது. ரத்தக் காயம்தானே, காம்பவுண்ட் தாண்டி ஓடும்போது கம்பி குத்தி கிழிச்சதா எழுதிக்கனு இன்ஸ்பெக்டர் செல்வம் சொன்னார். என்னை கொடூரமாக அடித்து கையெழுத்து வாங்கினார்கள். அரசு மருத்துவனைக்கு சென்று அங்கு லைட்டை அணைத்துவிட்டு இருட்டில் கையெழுத்து வாங்கி, நீதிபதி முன் என்னை நிறுத்தினார்கள். நான் தப்பு பண்ணவில்லை என்று எவ்வளவோ கதறி அழுதேன், ஆனால் என்னை அவர்கள் விடுவதாக இல்லை.
அவர்கள் அடித்ததால் என்னால் நீண்ட நேரம் நிற்க முடியாது, உட்கார்ந்து செய்யும் வேலைகளை மட்டுமே பார்க்க முடியும். என்னால் வேலை எதற்கும் செல்ல முடியவில்லை. அப்போதே நான் கொலை செய்தேன் என பொய்யாக ஒப்புக்கொண்டிருந்தால்கூட இத்தனை அடி கிடைத்திருக்காது. உடலாவது நன்றாக இருந்திருக்கும்.
2014 பிப்ரவரி 2ஆம் தேதிதான் எனக்கு பிணை கிடைத்தது. காவல் துறையினர் அடித்து நான் உயிரோடு இருக்கிறேன் என சொல்வதை பெருமையாக நினைக்கிறேன். அரசு மருத்துவமனையில் ரத்த வாந்தி எடுத்தேன், 90 நாள்கள் கொடூர சித்ரவதையை அனுபவித்தேன் என்கிறார்.
இரட்டைக் கொலை வழக்கு மறு விசாரணை
இந்த வழக்கை மறு விசாரணை செய்ய யேசுதாஸ் உள்பட 4 பேரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை மறு விசாரணை செய்ய உத்தரவிட்டது. அதன்படி தட்டப்பாறை இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்ற பெலிக்ஸ் சுரேஸ் பீட்டர் இதனை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தார். 2015 மே 27ஆம் தேதி உண்மையான குற்றவாளிகளின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டு, யேசுதாஸ் உள்பட நான்கு பேரும் விடுவிக்கப்பட்டனர்.
யேசுதாஸின் நிலை என்ன?
2013ஆம் ஆண்டு இந்த இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யேசுதாஸ், 2015-இல் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். ஆனால், இந்த சமூகம் அவரை ஏற்றுக்கொண்டதா?... தலித் சமுதாயத்தை சேர்ந்த இவருக்கு பொருளாதார ரீதியாக உதவவும் யாருமில்லை. கேரளாவை தலைமையிடமாகக் கொண்ட தனியார் நிதி நிறுவனத்தில் காசாளராக பணியாற்றிவந்த யேசுதாஸின் வேலை பறிபோனது. நன்னடத்தை சான்றிதழ் பெற்றும் பயனில்லை. கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு மேல் பணியில்லாமல் இருக்கிறார். காவலர்கள் மூர்க்கமாக தாக்கியதில் அவரது ஒரு கால் சரியாக செயல்படவில்லை. நீண்ட நேரம் நின்று பணி செய்ய முடியாது. அவருக்கு யாரும் பணி வழங்கவும் தயாராகயில்லை.
நீதிமன்றத்தில் நிவாரணம் கேட்டு யேசுதாஸ் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இன்றுவரை அவருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை, கரோனா சூழல் என்பதால் வழக்கு தள்ளிப் போயிருக்கிறது. தனக்கான நீதி கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார். யேசுதாஸ் வாழ்க்கை இந்த நிலைக்கு மாறக் காரணமாக இருந்த இன்ஸ்பெக்டர் செல்வம் உயிரிழந்துவிட்டார். யேசுதாஸுக்கு நீதி கிடைக்குமா?