தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் பள்ளியை முந்தி அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு 19 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
கரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பொருளாதாரம் ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு கடைநிலை ஊழியர்கள், தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு கடைநிலை ஊழியர்கள் தங்களைவிட தங்களது பிள்ளைகள் சிறந்த கல்வி அறிவை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஆங்கில வழிக் கல்வியில் அடிப்படை கல்வியை அளித்து வந்தனர்.
ஆங்கில வழிக்கல்வி மீது ஏற்பட்ட மோகத்தின் காரணமாக பல தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்து வந்தனர். தற்போது ஊரடங்கு காரணமாக பொருளாதாரரீதியாக பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள பல தனியார் நிறுவன ஊழியர்கள், கடைநிலை பணியாளர்கள், தொழிலாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் தற்போது தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சேர்த்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் எல்கேஜி முதல் 12ஆம் வகுப்பு வரை 7 ஆயிரத்து 99 மாணவ மாணவியர்கள் அரசு பள்ளிகளிலும், 11 ஆயிரத்து 995 மாணவ மாணவியர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் 3,046 மாணவ மாணவியர்கள் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் வகுப்புக்கான சேர்க்கையில் அரசு பள்ளியில் 2,532 மாணவ மாணவியர்கள் சேர்ந்துள்ளனர்,இது தனியார் பள்ளிகளை விட அதிகமாகும்.
அரசு உதவி பெறும் பள்ளியில் 3 ஆயிரத்து 838 மாணவ மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோன்று 11ஆம் வகுப்பு பொறுத்தவரை தனியார் பள்ளியில் 1,069 மாணவ மாணவிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அரசு பள்ளியில் 2,302 மாணவ-மாணவிகளும், அரசு உதவி பெறும் பள்ளியில் 4 ஆயிரத்து 475 மாணவ மாணவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மொத்தத்தில் கரோனா பெரும் தொற்று காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மீது பொதுமக்களுக்கு கூடுதல் மோகம் ஏற்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளை மிஞ்சி அரசு பள்ளிகளில் கல்வி தரம் அதிகரித்தால் மேலும் ஏராளமான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை சேர்க்க அரசு பள்ளிகளையே நாடுவார்கள் என்பதில் எந்தவித சந்தேகமில்லை.