தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கயத்தார் தியாகராஜ பாகவதர் தெருவில் உள்ள வேலு என்பவரின் வீடு கனமழைக்கு இடிந்து விழுந்தது. அப்போது, வீட்டிலிருந்த 15 பேர் உடனடியாக வெளியே சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த கயத்தார் பேரூராட்சி உறுப்பினர் அய்யாதுரை நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளார்.
வீடுகள் இடிந்து விழுந்து சேதம்: இதேபோல, கனமழை பெய்து வரும் நிலையில், கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் உள்ள அன்னை தெரசா நகர் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் வீடு, கருணாநிதி நகரையை சேர்ந்த கஸ்தூரி என்ற 80 வயது மூதாட்டி வீடும் இடிந்து சேதம் அடைந்துள்ளது.
அதிகாரிகள் ஆய்வு: கோவில்பட்டி அருகே கயத்தாறு வட்டம், ஆத்திகுளம் கிராமத்தில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் இன்று (டிச.19) ஆய்வு செய்தனர். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை 2 மணி முதல் தொடங்கிய மழைப்பொழிவு தற்போது வரை நீடித்து வருகிறது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி வருகிறது. வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆத்திகுளம் கிராமத்தை சூழ்ந்த வெள்ளம்: இந்நிலையில் கயத்தார் வட்டம், தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குட்பட்ட ஆத்திகுளம் கிராமத்தை ஒட்டி செல்லும் ஏண்டா குளம் தொடர் மழைக்கு நிரம்பி மறுகால் பாய்ந்தது. காலையில் இந்த குலத்தின் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் ஆத்திகுளம் கிராமம் முழுவது தண்ணீர் சூழ்ந்துள்ளது. சுமார் 5 அடி அளவுக்கு தண்ணீர் கிராமத்தை சூழ்ந்ததால், கிராம மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி அங்குள்ள உயரமான பகுதிகளில் இரவு முழுவதும் நின்று கொண்டிருந்தனர். நேற்று காலை வெள்ளம் சிறிது குறைந்து 3 அடி அளவுக்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது.
வருவாய்த்துறையினர் ஆய்வு: தகவல் அறிந்த வட்டாட்சியர் நாகராஜன், ஊராட்சி மன்ற தலைவி செல்வி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அய்யாதுரை மற்றும் அதிகாரிகள் ஆத்திகுளம் கிராமத்திற்கு வந்து மக்களுக்கு தேவையான உணவுகளை வழங்கினர். மேலும், அங்கு பாதிக்கப்பட்ட வீடுகளையும் பார்வையிட்டனர். தொடர்ந்து வெள்ளம் வடியும் வரை உணவு வழங்கப்படும். மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தினர். தொடர்ந்து அப்பகுதியை வருவாய்த்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நெல்லையில் வடியத் தொடங்கிய மழை வெள்ளம்.. வெள்ளநீரில் மிதந்து வந்த ஆண் சடலம்!