தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் அமைந்துள்ள அருள்மிகு தம்பிராட்டி அம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று (மே.10) நடைபெற்ற பெரிய, சிறிய மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி போட்டிகள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
வல்லநாட்டில் அமைந்துள்ள அருள்மிகு தம்பிராட்டி அம்மன் ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஆலய விழா கமிட்டி சார்பில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயங்கள் நடத்தப்பட்டது. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டு வண்டிகள் மற்றும் குதிரை வண்டிகள் கலந்துகொண்டன.
எட்டு மயில் தூரம் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி போட்டியில் ஏழு வண்டிகள் பங்கேற்றன. இதில் நெல்லை மாவட்டம், நாலந்துரை பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவரது வண்டி முதலிடத்தைப் பிடித்து அபார வெற்றிப்பெற்றது. கயத்தாறு காந்திரா ராஜன் என்பவரின் வண்டி இரண்டாம் இடமும், வல்லநாடு முருகன் என்பவரது மாட்டு வண்டி மூன்றாவது இடமும் பிடித்தன.
இதையும் படிங்க: பழனி முருகன் கோயிலில் உண்டியல் வருவாய் எவ்வளவு தெரியுமா?
ஐந்து மைல் தூரம் நடைபெற்ற 14 வண்டிகள் கலந்து கொண்ட சிறிய மாட்டு வண்டி போட்டியில், துரைசாமிபுரத்தைச் சேர்ந்த ஐயங்கார் பேக்கரி சுரேஷ் குமார் என்பவரது வண்டி முதலிடத்தைப் பிடித்து அசத்தியது. வள்ளியூர் ஆனந்தத் தேவர் என்பவரது வண்டி இரண்டாம் இடமும், கம்பம் தினேஷ்குமார் என்பவரது வண்டி மூன்றாம் இடமும், வல்லநாடு கந்தகுமார் அண்ணாமலை என்பவரது வண்டி நான்காம் இடமும் பிடித்தன.
இதைத்தொடர்ந்து, எட்டு மைல் தூரத்திற்கு நடைபெற்ற குதிரை வண்டி போட்டியில் 9 வண்டிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் பாண்டித் தேவர் என்பவரது குதிரை முதலிடமும், வினோத் திருச்செந்தூர் என்பவர் குதிரை இரண்டாவது இடமும், மூன்றாவது இடத்தை கே.எஸ்.ராகவன் என்பவரது குதிரையும் பிடித்தது.
பெரிய மாட்டு வண்டியில் முதலிடம் பிடித்த மாட்டுவண்டி உரிமையாளருக்கு ரூபாய் 60 ஆயிரம் பரிசும், சிறிய மாட்டு வண்டியில் முதலிடம் பிடித்த மாட்டுவண்டியின் உரிமையாளருக்கு முப்பதாயிரம் ரூபாய் பரிசும், குதிரை வண்டி போட்டியில் முதலிடம் பிடித்த குதிரை வண்டியின் உரிமையாளருக்கு 15,000 ரூபாய் பரிசும் வழங்கப்பட்டன. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியை, அப்பகுதியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
இதையும் படிங்க: பொற்கொடியம்மன் விழா - ஏரியில் சமைத்து மக்களுடன் உண்டு தேரை தூக்கி வழிபாடு!