தூத்துக்குடி சுந்தரவேல் புரத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (39). மாற்றுத்திறனாளியான இவர், பத்திரப் பதிவு அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் தட்டச்சராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், சுந்தரவேல் புரத்தில் வீடு ஒன்றை விலைக்கு வாங்குவதற்காக தந்தை மற்றும் சகோதரர் முத்துலட்சுமியிடம் பண உதவி கேட்டுள்ளனர்.
இருவர் மீது இருந்த நம்பிக்கையின் அடிப்படையிலும் பாசத்தின் காரணமாகவும், தான் சேர்த்து வைத்திருந்த நகை, வீடு ஆகியவற்றை விற்று பணம் கொடுத்துள்ளார். இதைக்கொண்டு சுந்தரவேல் புரத்தில் அவரது தந்தையும், சகோதரரும் வீடு வாங்கியுள்ளனர்.
அந்த வீட்டின் கீழ்ப்பகுதியில் முத்துலட்சுமியும், மேல் மாடியில் சகோதரரும் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்நிலையில், வீட்டை முழுவதுமாக அபகரிக்கும் நோக்கில் தந்தையும், சகோதரரும் முத்துலட்சுமியை துன்புறுத்தியுள்ளனர். மேலும், அவரை அடித்து கொடுமைப்படுத்தியதுடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.
இதையடுத்து, இது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் முத்துலட்சுமி இன்று (நவம்பர் 4) புகார் அளித்தார். அதை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.