தூத்துக்குடி: சென்னை வானிலை ஆய்வு மையத்திலிருந்து பெறப்பட்ட மின்னஞ்சல் அவசர செய்தியின்படி, வருகிற 18ஆம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதி, தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சுழல் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரை வீசுவதுடன், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசக் கூடும்.
இதனால் விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் 400 விசைப்படகுகள், 5,000 நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை.
இதற்கான தகவலை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆலோசனையின் பேரில் மீன்பிடி துறைமுக உதவி இயக்குனர் விஜயராகவன், மின்துறை உதவி இயக்குனர் புஷ்ரா மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள், மின்துறை, பொது பஞ்சாயத்து உள்ளிட்ட அனைத்து மீனவ கிராமங்களிலும் தெரியப்படுத்தி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி இன்றும், நாளையும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், வரும் 18, 19 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டு, அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று காலையில் இருந்து தூத்துக்குடியில் வெயில் இல்லாமல் உள்ளது. வானம் மேகமூட்டத்துடன், மழை வருவதற்கான அறிகுறி அதிகமாக காணப்பட்டது. மழை முன்னேற்பாடு பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் மழை பாதுகாப்பு மையங்களும் தயார் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: இடப் பிரச்சினையில் இரு தரப்பு தகராறு! காவல் நிலையத்தில் கைதானவர் தற்கொலைக்கு முயற்சி? கோவில்பட்டியில் பரபரப்பு..!