தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்க தொடக்க விழா தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இந்து வியாபாரிகள் சங்க மாநிலத் தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒரு போர்வையாகப் பயன்படுத்தி, இல்லாத ஒரு பிரச்னையை இருப்பதாகக் கூறும் ஜனநாயக விரோதப்போக்கு நடந்துவருகிறது. தொடர்ந்து மக்களை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை செயல்படுத்தவிடாமல் தடுப்பது நாடாளுமன்ற அதிகாரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல். இந்திய நாட்டைச் சேராத வெளிநாட்டவருக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று போராடுகின்ற அருவருப்பான செயலை எதிர்க்கட்சியினர் செய்துகொண்டிருக்கின்றனர்.
இந்தப் போராட்டத்தை இந்தியர் அல்லாத சோனியாவும், தேசவிரோதி ஸ்டாலினும் ஒன்றிணைந்து தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் தூண்டுதலின்பேரில் நாட்டில் மூன்று தூண்களின் மீதும் தாக்குதல்கள், வன்முறைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமே தமிழ்நாடு அரசு முன்வைத்துள்ளது. அதைத் தவிர வேறு எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென்றால் இலங்கை நாட்டு சட்டத்திலும் இரட்டைக் குடியுரிமை வழங்கலாம் என்று திருத்தம் கொண்டுவர வேண்டும்.
அது இல்லாமல் இலங்கைத் தமிழர்களுக்கு இங்கு குடியுரிமை வழங்கப்பட்டால் அவர்கள் அக்கணமே அந்நாட்டில் அயல்நாட்டவர்களாகக் கருதப்படும் நிலை ஏற்படும். அவர்களின் சொத்துகளும் முடக்கப்படும்.
எனவே, இது தொடர்பாக அரசு பரிசீலிக்கும் என்று சொல்லி இருக்கிறோம். இலங்கை அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி முடிவுசெய்யும்” என்றார்.
இதையும் படிங்க: அப்பா பெயர் தெரியாதவர்களுக்கு என்ன பெயர்? கொச்சையாக பேசிய ஹெச்.ராஜா