தூத்துக்குடியில் கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் இறுதி நாளான மே 22ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் பேரணி சென்றபொழுது கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.
பல கட்ட விசாரணை அக்டோபர் 19ஆம் தேதியான நாளையுடன் நிறைவடைகிறது. விசாரணைக்கு ஆஜராகுமாறு 20 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்த நிலையில் தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன் நேரில் ஆஜராகி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம், "தூத்துக்குடியில் நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முழுக்க முழுக்க அரசின் அலட்சியப்போக்கு, மெத்தனம், மக்களின் உணர்வுகளை மதிக்காததே காரணம். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் 100 நாள்கள் போராடிய நிலையிலும் அவர்களிடம் அரசு சமாதானம் பேசவில்லை.
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவானவர்களை மட்டுமே அழைத்து கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். துப்பாக்கிச் சூட்டுக்கு யார் அனுமதி அளித்தார்கள் என்று இன்னமும் தெரியவில்லை. முதலமைச்சர் துப்பாக்கிச்சூடு நடந்தது தனக்குத் தெரியாது என்கிறார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திமுகவும் மக்களோடு மக்களாக போராட்டங்களை நடத்தியிருக்கிறது. ஆகவே, மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த அரசு நடக்க வேண்டும்" என்றார்.