தூத்துக்குடி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பட்டியல் இன மாணவரை சக மாணவர்கள் வீட்டிற்கு சென்று அரிவாளால் அவரையும், அவர் தங்கையையும் தாக்கிய சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். ஹரிபிரசாத் பயிலும் அதே பள்ளியில் கழுகுமலையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் 11ஆம் வகுப்பில் வேறு பாடப் பிரிவில் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று மாலை இந்த மாணவர்கள் இருவரும் வெளியே சண்டை போட்டுக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர், சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவரையும் சண்டை போட விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் பட்டியலின மாணவரை அவர்கள் மோசமான வார்த்தைகளால் திட்டி, சாதியை குறித்து இழிவாக பேசியதால் அவர் அங்கிருந்து சென்றுள்ளார். இதனையடுத்து மாணவரைத் தேடி, வேற்று சமூக மாணவர்களில் ஒருவர் 10 பேரை அழைத்துக் கொண்டு நேற்று லெட்சுமிபுரம் சென்றுள்ளார்.
ஆனால், இதனை அறியாத அம்மாணவர் தனியாக சுற்றிக் கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து தனியாக இருந்த அந்த மாணவரை, வேற்று சமூகக் குழுவினர் சாதி ரீதியாக திட்டி, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பட்டியலின மாணவர் காயம் அடைந்த நிலையில், அவரது செல்போனும் சேதமடைந்துள்ளது.
காயம் அடைந்து அங்கேய இருந்த அம்மாணவரை அவரது உறவினர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கழுகுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே நாங்குநேரி பள்ளியில் பட்டியலின வகுப்பினைச் சேர்ந்த மாணவர் மற்றும் அவரது தங்கை தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது கழுகுமலையில் பட்டியலின மாணவர் மீது மாற்று சமுதாயங்களைச் சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்த்திய சம்பவம் பெரும் பரபரப்பினையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.