தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இன்று முதல் நாளை காலை ஆறு மணி வரை எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு, முழுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் முழு ஊரடங்கு செயல்பாட்டினை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.
ஆய்வின் மத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தூத்துக்குடி மாவட்டத்தில் 68 இடங்களில் வாகன சோதனைச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, வாகனத் தணிக்கை நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாநகருக்குள் 28 இடங்களில் காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை பயன்படுத்தப் போவதில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் அந்த அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.