தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள ஜீவா நகர் கடற்கரை பகுதியில் இருந்து பீடி இலைகள் இலங்கைக்கு கடத்த இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு காவல் துறையினருக்கு கிடைத்தது. அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப்புலனாய்வு துறை ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில், கியூ பிரிவு போலீசார் திருச்செந்தூர் ஜீவா நகர் கடற்கரையில் நின்று கொண்டிருந்த நாட்டுப் படகை நேற்று (அக்.24) சோதனை செய்ய முற்பட்டனர்.
அப்போது, அந்த படகிலிருந்து தப்பி ஓட முயன்ற நபர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள், தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்த பிரபு, அலங்கார தட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், தாளமுத்து நகரைச் சேர்ந்த இரட்சகர், திரேஸ் புரதத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பது தெரியவந்தது. அதன்பின் படகை சோதனையிட்டபோது, ஒரு பீடி இலை சுமார் 1,400 கிலோ எடைக்கொண்ட பீடி இலை பண்டல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய நாட்டுப் படகையும் பறிமுதல் செய்தனர். அதோடு 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். அண்மைக்காலமாக பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்டவை இலங்கைக்கு கடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: CCTV; கத்தியுடன் கடைக்குள் நுழைந்து நகைகளை எடுத்துச்சென்ற முதியவர்