தூத்துக்குடி: வடஅமெரிக்க கம்மவார் சங்கம் (கானா) சார்பில் கோவில்பட்டி பகுதியில் உள்ள கயத்தாறு, வில்லிசேரி, கழுகுமலை, இளையரசனேந்தல், கீழஈரால் ஆகியவற்றில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதில் முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், 'தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் கரோனாவால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தடுக்க அரசு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக அடங்கிய யானையாக இருந்தால் ஊருக்குள் வலம் வரும். அடங்காத யானையாக இருந்தால் காட்டில் தான் திரியும். அதிமுக இமாலய வெற்றி பெற்ற போதும் அடக்கமாகத்தான் இருந்துள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் 13 மணி நேரம் மின்தடை இருந்தது.
அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலம்
ஆனால், அதன் பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டது.
தற்போது திமுக ஆட்சி பொறுப்பு ஏற்கும் வரை மின்வெட்டு இல்லை. மின்வெட்டு பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டுமே தவிர, ஏதாவது சாக்குபோக்குக் காரணம் சொல்லக் கூடாது.
முந்தைய ஆட்சி, குறை இல்லாத ஆட்சிதான். திமுக கூட்டணியின் பலம் காரணமாக வெற்றி பெற்று இருக்கலாமே தவிர, அதிமுக ஆட்சியின் மீதான மக்கள் வெறுப்பின் காரணமாக அல்ல.
அதிமுகவை மக்கள் வெறுக்கவில்லை. வெறும் மூன்று விழுக்காடு வித்தியாசத்தில்தான் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இது பெரிய மாற்றம் கிடையாது' என்றார்.
இதையும் படிங்க: 'டெண்டர் முறைகேடு: நிச்சயம் நடவடிக்கை' - கே.என் நேரு