தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, கடந்த 2007, 2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் முறைகேடாக, பங்குகளை விற்பனை செய்துள்ளதாக அமலாக்கத் துறையிடம் ரிசர்வ் வங்கி புகார் அளித்தது.
இது குறித்தான விசாரணையில் ஸ்டாண்டர்டு சார்ட்டெர்ட் (Standard Chartered) வங்கியின் பங்குகளை விற்பனை செய்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவுசெய்து, சம்பந்தப்பட்ட தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, ஸ்டாண்டர்டு சாட்டெர்ட் வங்கி உள்ளிட்டோருக்கு 608 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில், அந்நிய செலாவணி மோசடி சட்டத்தின்படி நோட்டீஸ் அனுப்பியது.
மெர்க்கன்டைல் வங்கி, ஸ்டாண்டர்டு சார்ட்டெர்ட் வங்கி மூலம் 46,868 ஆயிரம் பங்குகளை வெளிநாட்டில் உள்ள 7 நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் அனுமதி பெறாமல் விற்றுள்ளது அமலாக்கத்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அந்நிய செலாவணி மோசடி வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு 17 கோடி ரூபாயும் ஸ்டாண்டர்டு சார்ட்டெர்ட் வங்கிக்கு 100 கோடி ரூபாயும் அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த முறைகேடு நடந்த காலகட்டத்தில் மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குநராக இருந்த எம்ஜிஎம் மாறனுக்கு ரூ.35 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.