தூத்துக்குடி: பள்ளி வளாகங்களிலும், பள்ளி மாணவர்கள் இடையேயும் சாதிய மோதல் சார்ந்த செயல்பாடுகள் கடந்த சில நாட்களாக அதிகரித்து, நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை லட்சுமியாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் காளிராஜ். கூலித் தொழிலாளியான இவரது மகன் ஹரி பிரசாத் (16), கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு காமர்ஸ் பிரிவில் படித்து வருகிறார். இவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்.
இந்நிலையில், ஹரி பிரசாத் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 17 ஆம் தேதி) மாலை பள்ளியின் வெளியே நின்று கொண்டிருந்த போது, அங்கு 11ம் வகுப்பு சயின்ஸ் குரூப் மாணவர் ஒருவர், அதே வகுப்பில் படிக்கும் ஒரு மாணவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட ஹரி பிரசாத் ஏன் சண்டை போடுகிறீர்கள் என்று கேட்டு அவர்களை தடுத்துள்ளார்.
அப்போது ஹரி பிரசாத்தை நீ எதற்கு எங்கள் பிரச்னையில் தலையிடுகிறாய் என்று கூறி தாக்குதல் நடத்திய மாணவர், வாக்குவாதம் செய்ததைத் தொடர்ந்து, அவர்களிடையே அங்கு பிரச்னை நடந்துள்ளது. மேலும் அந்த மாணவர்கள் பட்டியலின மாணவரான ஹரி பிரசாத்தை மோசமான வார்த்தைகளால் திட்டி, சாதியை குறித்து இழிவாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Cm House bomb threat : முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் திடீர் மிரட்டல்!
அதனைத் தொடர்ந்து, அந்த நேரத்தில் அங்கு ஆசிரியர்கள் வந்து மாணவர்களை சத்தம் போட்டு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் ஹரி பிரசாத் லட்சுமியாபுரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த போது, அவரைத் தேடி நேற்று முன் தினம் இரவு பத்துக்கும் மேற்பட்டோர் பைக்குகளில் வந்து, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர்.
மேலும், அவரிடம் இருந்த செல்போனை பறித்து தரையில் எறிந்து உடைத்து விட்டு சென்றுள்ளனர். இதில் காயமடைந்த ஹரி பிரசாத் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடா்பாக, கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளா் வெங்கடேஷ் விசாரணை மேற்கொண்டார்.
அதன் பின்னா் ஹரி பிரசாத்தை தாக்கியதாக கல்லூரி மாணவா்கள் இருவா் உள்பட 5 போ், தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் நேற்று (ஆகஸ்ட் 18) கைது செய்யப்பட்டனா். இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனா். இதனிடையே, ராஜகுருவைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அளித்த புகாரின் பேரில், ஹரிபிரசாத் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
இதையும் படிங்க: பள்ளி வகுப்பறை பூட்டுகளில் மனித மலம் பூசப்பட்ட கொடூரம்.. மீண்டும் சாதிய மோதலை தூண்ட திட்டமா?