தூத்துக்குடி: தருவைகுளம் மீனவர்கள் மட்டுமல்லாமல் ராமேஸ்வரம் மீனவர்களையும் படகுகளோடு திரும்ப பெற தமிழக அரசு, மத்திய அரசின் உள்துறை அமைச்சரை வலியுறுத்தி உள்ளதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 4) தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் ஹெல்த் வாக் சாலையை திறந்து வைத்தார். அந்த வகையில் தூத்துக்குடியில், ஹெல்த் வாக் சாலை திறப்பு நடைப்பயிற்சியில் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு நடை பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நடைப்பயிற்சியானது, பெல் ஹோட்டலில் தொடங்கி மீன்பிடி துறைமுகம், இனிகோ நகர், ரோச் பூங்கா, படகு குழாம் வரை 8 கீ.மி தூரம் சென்று, மீண்டும் அதே வழியில் திரும்பி பெல் ஹோட்டல் வரை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, மேயர் ஜெகன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, பொதுமக்கள், அரசு மருத்துவ கல்லூரி மாணவ மாணவியர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, "தருவைகுளம் மீனவர்கள் மாலத்தீவில் தவறுதலாக போகும்போது பிடிபட்டுள்ளனர். பிடிபட்டவர்களின் படகை வைத்துக்கொண்டு 12 பேரரையும் விடுதலை செய்வதாக மாலத்தீவு அரசு கூறுகிறது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து படகோடு அந்த மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். விரைவில் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் ஒன்றிய அரசு தலையிட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
மேலும், தருவைகுளம் மீனவர்கள் மட்டுமல்லாமல், ராமேஸ்வரம் மீனவர்களையும் படகோடு திரும்ப பெற்றுத் தர வேண்டும் என்ற வகையில் மத்திய அரசின் உள்துறை அமைச்சருக்கு, தமிழ அரசு அழுத்தம் கொடுத்துள்ளது. கடந்த வாரம் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர் பாலு, மத்திய உள்துறை இணை அமைச்சரை சந்தித்து அழுத்தம் கொடுத்துள்ளார்.
மத்திய அரசு தமிழக கால்நடை பராமரிப்பு துறைக்காக வழங்கியுள்ள 300 வாகனங்கள் வெளியில் கொண்டு வரப்படாமல் இருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், வாகனங்கள் வந்து இருக்கின்றது. ஆனால் நடைமுறைக்கு வழங்க வேண்டிய வாகனங்களுக்கு மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி வழங்கும்.
இந்நிலையில், மத்திய அரசு 60 சதவீதத்தை விடுவிக்காமல் இருக்கிறார்கள். 5 மாதம் நிதியை கொடுத்திருக்கிறார்கள். மாநில அரசு விடுவித்த பின் ஆம்புலன்ஸ் வாகனம் தொடங்குவதற்கான நடைமுறைகள் ஏற்படுத்தப்படும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: "இத்தனை வருட அரசு பணியில் லஞ்சம் வாங்கவில்லை என யாராவது ஒருவர் கூறுங்கள். உங்கள் காலில் விழுகிறேன்"- திருவள்ளூர் ஊழல் தடுப்பு ஆய்வாளர்!