தூத்துக்குடி: மத்திய அரசின் புதிய மீன்பிடி சட்டத்திருத்த மசோதா 2021ஐ கண்டித்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் புதிய மீன்பிடி சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய கோரியும் இன்று(ஆகஸ்ட் 9) தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பெரியதாழை முதல் வேம்பார்வரை உள்ள கடற்கரை கிராமங்களில் நாட்டுப் படகு, விசைப்படகு மீனவர்கள், கடலுக்கு செல்லாமல் மீன்பிடி சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் ரீகன் தெரிவிக்கையில், “மத்திய அரசின் புதிய மீன்பிடி சட்டத்திருத்த மசோதா மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கக் கூடியதாக உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மீன்பிடி தொழிலில் லட்சக்கணக்கான மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். புதிய மீன்பிடி சட்டஅத்திருத்தத்தின்படி மீனவர்கள் 12 கடல் மைல்களுக்குள்ளாகவே தொழில் செய்ய வேண்டும். எந்த மீன் பிடிக்கச் செல்கிறோம் என்பதை கரையில் அலுவலர்களிடம் பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும்.
மீனவர்களை முடக்கிப் போடும் நடவடிக்கை
குறிப்பிட்ட மீன் வகை தவிர வேறு வகையினை மீனவர்கள் பிடித்திருந்தால் அதை அவற்றை கடலிலேயே விட்டுவிட வேண்டும். மீனவர்கள் சட்டத்திருத்த வரைவுகளை மீறி செயல்பட்டால் முதல்முறை அபராதமும், இரண்டு முறை அபராதத்துடன் கூடிய சிறை தண்டனையும், மூன்றாம் முறை மீறினால் படகு பறிமுதல் செய்யப்படுவதுடன் சம்பந்தப்பட்ட மீனவர் மீண்டும் தொழில் செய்ய முடியாதபடிக்கும் கடும் நடவடிக்கைகள் எடுக்க வழிவகுக்கிறது.
இது மீனவர்களை முற்றிலும் முடக்கிப் போடும் நடவடிக்கை. எனவே மத்திய மீன்பிடி சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக இன்று (ஆகஸ்ட்.9) நடைபெறும் மீனவர்கள் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு துணை நிற்க வேண்டும். போராட்டம்தான் இதற்கு தீர்வு என்றால் மீனவர்களாகிய நாங்கள் தொடர்ந்து போராட தயாராக இருக்கிறோம்.
இன்றைய தினம் மீன்பிடி சட்டத்திருத்த வரைவைத் திரும்பப் பெற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க உள்ளோம். இன்று (ஆகஸ்ட்.9) நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகுகள் மூலம் அரசு கிடைக்கும் ஒருநாள் வருமானம் சுமார் ரூ.4 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.
இதேபோல் திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் சுமார் 10,000 பேர், கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.