2015ஆம் ஆண்டு சிப்பிகுளம் கடல் பகுதியில் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் சோதனை அடிப்படையில் மிதவை கூண்டில் மீன் வளர்க்கும் முறையை அறிமுகப்படுத்தியது. சுமார் ஓராண்டுக் காலம் தீவிர ஆய்வுக்குப் பின் சிப்பிகுளம் கடல் பகுதி மிதவை கூண்டுகளில் மீன்களை வளர்க்க ஏற்ற இடமாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து முதலில் சோதனை அடிப்படையில் மிதவை கூண்டுகளில் சிங்கி இறால் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இப்பகுதியைச் சேர்ந்த ரெக்சன் (38) இத்தொழிலைப் பல ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செய்துவருகிறார். முதல் முறையிலேயே கூண்டில் மீன் வளர்க்கும் திட்டம் நல்ல பலனைத் தந்ததால், ரெக்சன் இந்தத் தொழிலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். இப்போது, தமிழ்நாட்டில் கூண்டுகளில் மீன்களை வளர்க்கும் தொழிலில் முன்னோடியாகவும் இருக்கிறார் ரெக்சன். தற்போது சிப்பிகுளம் கடல் பகுதியில் மட்டும் 10 கூண்டுகளில் சிங்கி இறால் (Lobster fish), கடல் விரால் (Cobia fish), கொடுவா (Seabass fish) ஆகிய மீன்கள் வளர்க்கப்பட்டுவருகின்றன.
லாபம் தரும் மீன்வளர்ப்பு
கூண்டு இறால் மீன் வளர்ப்பு குறித்து சிப்பிகுளம் மீனவர் ஒருவர் கூறுகையில், "சிப்பிகுளம் பகுதியில் மத்திய, மாநில அரசின் உதவியுடன் கூண்டில் சிங்கி இறால் மீன் வளர்ப்பு தொழில் செய்துவருகிறோம். இதில் நல்ல லாபமும் அடையமுடிகிறது. சிங்கி இறால் வளர்ப்புக்குச் சுற்றுச்சூழல் தூய்மை மிக முக்கியம். சிங்கிறாலுக்கு காலை, மாலை என இருவேளையும் சங்கு தசையினை உணவாக இட்டு வளர்க்கிறோம்" என்றார்.
மத்திய அரசு மானியம்
தற்போது மத்திய அரசின் மானியத்தின்படி கூண்டு இறால் வளர்ப்புக்கு ஆண்களுக்கு 30 விழுக்காடும், பெண்களுக்கு 60 விழுக்காடும் மானியம் வழங்கப்படுகிறது. மீன்களிடமிருந்து வரும் கழிவுகளால் அந்த இடம் அசுத்தமடையாமலிருக்க கடற்பாசிகளையும் கடல் சிப்பிகளையும் வளர்க்கிறார்கள். கடல் சூழ்நிலை குறித்து தூத்துக்குடி மத்திய கடல்வள ஆராய்ச்சி மைய அலுவலர்களும் மீன்வளத் துறையினரும் இரு மாதத்திற்கு ஒருமுறை ஆய்வையும் தொடர்ந்து செய்துவருகின்றனர்.
ஒரு அறுவடை... ஒரு கூண்டு... ஒரு லட்சம்...
சிங்கி இறால் ஒரு கிலோவரை வளரும் தன்மை உடையது என்றாலும் ஏற்றுமதிக்காக 200 முதல் 300 கிராம் இருக்கும்போதே அறுவடை செய்யப்படுகிறது. இந்தக் கூண்டுகளை வடிவமைக்க ரூ. 4 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை செலவாகும். ஒரு கூண்டை 5 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். ஒரு அறுவடையில் ஒரு கூண்டில் ரூ. 1 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்.
அரசுத் தரப்பிலும் இத்தொழிலுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டுவருகிறது. ஆனாலும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 'கிஷான் கிரெடிட் கார்டு' போல மீனவர்களுக்கு 'மீனவர் கிரெடிட் கார்டு' வழங்கினால் இத்தொழில் புது உத்வேகத்துடன் பன்மடங்கு பெருக்க முடியும் என்று நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர் இப்பகுதி மீனவர்கள்.
இதையும் படிங்க: தூத்துக்குடி விமான நிலையம் 2020க்குள் சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தப்படும்!