அண்மைக் காலங்களாக தீ விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துவருகின்றன. தொழில் நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்பட எதுவாயினும் அங்கு வரும் மக்களுக்கு உயிர் பாதுகாப்பு அளிக்க தீ தடுப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்ட வேண்டியது அந்தந்த நிறுவனங்களின் பொறுப்பு.
இவை முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? தீ பாதுகாப்பு குறித்து மத்திய அரசாங்கம் கூறியுள்ள பரிந்துரைகளை தொழிற்சாலைகள், சிறுகுறு நிறுவனங்கள் கடைப்பிடிக்கின்றனவா? அவசர காலங்களில் தீ பாதுகாப்புக்காக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஈ.டிவி பாரத் சார்பில் தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமாரிடம் பேசினோம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
(i) அரசு பரிந்துரை
”தீ பாதுகாப்புக்கும், உயிர் பாதுகாப்புக்கும் மத்திய அரசு சில பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. இந்த பரிந்துரைகள் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகள், பள்ளிகள் உள்பட அனைத்திற்கும் இவை பொருந்தும். இதன்படியே கட்டட வடிவமைப்பு செய்யப்பட்டு தீ பாதுகாப்பு- உயிர் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகின்றன” என்கிறார் தீயணைப்பு அலுவலர் குமார்.
(ii) விதிகள்
- 18.3 மீட்டருக்கு மேல் உள்ள கட்டடங்களில் அவசர காலங்களில் பயன்படுத்துவதற்கான 2 மாடிப்படிகள் அமைத்திருக்க வேண்டும். கட்டடம் அமைந்துள்ள இடத்தையும், கட்டடத்தையும் பொறுத்து அவசர கால வழிகள் 2 அல்லது 4 என்ற அளவில் அமைத்திருக்க வேண்டும்.
- ஒவ்வொரு தளத்திலும் தண்ணீர் இணைப்புக்கான ஓஸ் ரீல் பொருத்தி இருக்க வேண்டும். தேவையான இடங்களில் தீயணைப்பான் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட கட்டடங்களுக்கு உயிர் பாதுகாப்பும், தீ பாதுகாப்பு குறித்த சான்று அவசியமாகும். இதனைப் பார்வையிட்டு தீயணைப்பு துறை இயக்குநர் அல்லது சம்பந்தப்பட்ட துறை ரீதியான உயர் அலுவலர்கள் சான்றிதழ்கள் வழங்குவர்.
- 18.3 மீட்டருக்கு கீழ் உள்ள கட்டடங்கள் அடுக்குமாடி கட்டடங்களில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. அவ்விடங்களில் உள்ள கட்டடங்களுக்கு அந்தந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து தீ பாதுகாப்பு சான்று வழங்குவர்.
- இது தவிர ஒவ்வொரு மாதமும் தீயணைப்பு கருவிகள் சரியாக வேலை செய்கிறதா? அவற்றின் நிலை என்ன என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.
- தீ பாதுகாப்பு குறித்து விண்ணப்பிக்கும் ஒரு தொழில் நிறுவனமும் தொழிற்சாலையை எதுவாகினும் அதில் மத்திய அரசு கூறியுள்ள பரிந்துரைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்ய மாவட்ட தீயணைப்பு அலுவலர்களால் அலுவலர் ஒருவர் நியமிக்கப்படுவார். அந்த அலுவலர் தலைமையிலான தலைமையில் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனம் ஆய்வு செய்யப்பட்டு பரிந்துரைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என கண்காணிக்கப்படும். அவர் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் தீ பாதுகாப்பு சான்று வழங்கப்படும்.
தீயணைப்பான்கள்
- பொதுவாக தீயணைப்பான்கள் ஏ,பி,சி என மூன்று வகையில் சந்தைப்படுத்தப்படுகின்றன. விபத்துகளின்போது தண்ணீரால் அணைக்கப்படக்கூடிய அதாவது எரிந்து சாம்பலாக கூடிய பொருள்கள் தீப்பற்றி எரியும்போது அவற்றை அணைப்பதற்காக ஏ வகை தீயணைப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- திரவ வகையிலான எரிபொருள் குறிப்பாக பெட்ரோல், டீசல், எண்ணெய் ஆகியவற்றின் மூலமாக தீ விபத்து நேர்ந்தால் அவ்விடங்களில் தீயை அணைப்பதற்கு பி வகை தீயணைப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- எளிதில் தீப்பற்றக்கூடிய வாயு மூலமாக தீ விபத்து நேர்ந்தால் அங்கு ஏற்படும் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சி வகை தீயணைப்பான்கள் பயன்படுகின்றன.
இது குறித்த செயல் விளக்க நிகழ்ச்சியை மாவட்ட தீயணைப்பு துறையினர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பொது இடங்களில் மக்களின் விழிப்புணர்வுக்காக நடத்துவர். துறை ரீதியாகவும் தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும் என தீயணைப்பு அலுவலர் குமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மருத்துவமனைகளில் ஏற்படும் தீ விபத்துகளிலிருந்து நோயாளிகளைப் பாதுகாப்பது எப்படி? விவரிக்கிறது ஈடிவி பாரத்