தூத்துக்குடி மாவட்டம், குறுக்கு சாலை பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவர் அதே பகுதியில் சொந்தமாக நவதானிய குடோன் வைத்து நடத்தி வருகிறார். இந்த குடோனில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைப் பொருட்களான வத்தல் மிளகாய், பாசி பயறு, மொச்சை, உழுந்து உள்ளிட்ட பொருட்களை சேமித்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று அந்த குடோனில் எதிர்பாராத விதமாக தீபற்றியது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கொழுந்து விட்டு எரிந்த தீயை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ வேகமாக பரவியதால், கூடுதல் வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.