திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட மீன் மார்க்கெட் பகுதியில் 50க்கும் மேற்பட்ட மீன் கடைகள் இயங்கிவருகின்றன. இந்த மீன் கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து, திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர் நடராஜன், மீன்வளத் துறை உதவி இயக்குநர் வேல்முருகன், சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் மூன்று துறையினரும் சேர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்களை அலுவலர்கள் சோதனை செய்தனர். அச்சோதனையில் கெட்டுப்போன, தரமில்லாத 50 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து நடராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”மீன் மார்க்கெட்டில் கெட்டுப்போன மீன்கள் விற்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் ரசாயன மருந்து கலந்த மீன்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆனால், கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 50 கிலோ வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்று உணவுப் பொருள்கள் தரம் குறித்து மாவட்டம் முழுவதும் சோதனை செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு