தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல், சாயர்புரம், சேர்வைகரன்மடம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் வழியாக ஐ.ஓ.சி.எல். எண்ணெய் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. அப்பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிப்பதற்கு சுற்றுவட்டார விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இந்த விஷயத்தில் விவசாயிகளுக்கும் எண்ணெய் நிறுவன அதிகாரிகளுக்கும் இடையே தீர்வு எட்டப்படாத நிலையில், ஐ.ஓ.சி.எல். எண்ணெய் நிறுவன அதிகாரிகள் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக குலையன்கரிசல் பகுதியில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் உள்ள விளைநிலங்களில் அறுவடைக்கு தயாராகியிருந்த வாழை, நெல் உள்ளிட்டவற்றை அழித்து எரிவாயு குழாய் பதிப்பதற்காக குழிகளை தோண்டியுள்ளனர்.
தகவலறிந்து விவசாயிகள் திரண்டு வரவே, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்களையும் குழாய்களையும் வயல்வெளியிலேயே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். தொடர்ந்து விவசாயிகள், பொக்லைன் இயந்திரங்களையும் தளவாடங்களையும் சிறைப்பிடித்து நடுவயலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விவசாயிகள், ஐ.ஓ.சி.எல். எண்ணெய் நிறுவனத்தினர் விளைநிலங்களில் தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களை தடுக்க முயற்சிக்கும் பொழுது மத்திய அரசின் பலமும், அரசியல் பின்புலமும் இருப்பதாக கூறி மிரட்டுகின்றனர்.
வேளாண் பயிர்களை பாதுகாக்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பேட்டியளித்துள்ளார். அது உண்மையெனில், தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் பகுதியில் விவசாய நிலங்களை அழித்து எரிவாயு குழாய் பதிக்க முயற்சிப்பது சரியானதா? என்பதற்கு முதலமைச்சர்தான் விளக்கம் தரவேண்டும்.
இந்த விஷயத்தில் நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை நாங்கள் இவ்விடத்தை விட்டு நகரப் போவதில்லை. வருகின்ற 22ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் தூத்துக்குடி வரும்போது முத்தையாபுரம் பகுதியில் விவசாயிகளைத் திரட்டி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.