தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகளை, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இணைக்க வேண்டும், தென்காசி மாவட்ட ஊராட்சி எல்லைக்குள் 12 ஊராட்சிகள் இணைத்து வெளியிடப்பட்ட மறுவரையறைப் பட்டியலை ரத்துசெய்ய வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேசிய விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆதார் அடையாள அட்டையைக் கொண்டுவந்து அதைத் தரையில் போட்டு தங்களது கோரிக்கையை முன்வைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தேசிய விவசாயிகள் சங்கத்தின் தலைவரும், வழக்குரைஞருமான ரெங்கநாயலு தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து தங்களது கோரிக்கை அடங்கிய மனுவை கோட்டாட்சியர் விஜயாவிடம் வழங்கினர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட பின் கோட்டாட்சியர், இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டனர்.
விவசாயிகள் தங்களது கோரிக்கையாக, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் பிர்காவில் இருக்கும் 12 ஊராட்சிகளைக் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இணைக்க வேண்டும். இல்லையென்றால் 12 ஊராட்சிகளை ஒருங்கிணைத்து தனி ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும்.
தென்காசி மாவட்ட ஊராட்சி எல்லைக்குள் 12 ஊராட்சிகள் இணைத்து வெளியிடப்பட்ட மறுவரையறைப் பட்டியலை ரத்துசெய்ய வேண்டும் என்பதை மனுவில் வலியுறுத்தியிருந்தனர்.