தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவராமமங்கலம் அப்பன்கோயில் பகுதியைச் சேர்ந்தவர், சொக்கலிங்கம்(73). இவர் ஒரு விவசாயி, இவரது மனைவி கந்தம்மாள். இந்த இருவருக்கும் வீரலட்சுமி, மீனாட்சி என்ற இரண்டு மகள்களும், கணேசன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 7) இரவு சொக்கலிங்கம் வீட்டில் இருக்கும்போது, அங்கு வந்த இரண்டு பேர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே சொக்கலிங்கம் உயிரிழந்தார்.
இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல்நிலையத்திற்குப் பொதுமக்களால் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் மற்றும் ஸ்ரீவைகுண்டம் துணைக் காவல் கண்காணிப்பாளர் மாயவன் ஆகியோர் வந்து சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டனர். அதன்பின், சொக்கலிங்கம் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:கருணாநிதி நினைவு நாள்: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி!
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சொக்கலிங்கத்தின் தந்தை வைகுண்டராமனுக்கு ஆவுடையாச்சி, பொன்னம்மாள் என்ற இரண்டு மனைவிகள் உள்ள நிலையில், இருவரது குடும்பத்தினருக்கும் இடையே சொத்து பிரச்னை நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் அப்பன்கோயில் பகுதியில் சொத்து தொடர்பாக சொக்கலிங்கத்திடம் வைகுண்டராமன் இரண்டாவது மனைவி பொன்னம்மாளின் மகன் சீனி என்பவரது மகன் பூல்பாண்டி, தனது நண்பருடன் இணைந்து நேற்று இரவு பேசினார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பூல்பாண்டி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சொக்கலிங்கத்தை வெட்டினார். இதில், சொக்கலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து பூல்பாண்டியையும் அவருடன் வந்த சாமிநாதன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த மூன்று நாட்களில் ஸ்ரீவைகுண்டத்தில் மட்டுமே மூன்று கொலைகள் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:"ராம ராஜ்ஜியம் தான் நடக்கும்" - மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசிய ஆடியோ வைரல்.. காவலர் ராஜேந்திரன் சஸ்பெண்ட்!