தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கயத்தாறு அருகே தலையால் நடந்தான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (27). விவசாயியான இவருக்கு திருமணமாகி மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், செப்.17ஆம் தேதி தனது ஊருக்கு வெளியே உள்ள சொந்த தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது மின் மோட்டாரின் சுவிட்சை ஆன்செய்த போது எதிர்பாராதவிதமாக பாலமுருகன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பாலமுருகன் உயிரிழந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற கயத்தாறு காவல் துறையினர், பாலமுருகன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு இதுகுறித்து ஆய்வாளர் முத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
பாலமுருகன் நிலத்தில் மின்சார வாரியம் முறையாகப் பராமரிக்காத காரணத்தினால் தான் அவர் உயிரிழந்ததாகவும், மின்சார வாரியம் முறையாக மின் கம்பங்களை அகற்றி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்கவில்லை என்று காவல் நிலையத்தில் பாலமுருகனின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
பின்னர் இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்பட்டு, உறவினர்கள் காவல் நிலையத்திலிருந்து கலைந்து சென்றனர்.