கரோனா தொற்று நோய் ஏற்படாமல் பாதுகாத்து கொள்வதற்காக, முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற நிலை உள்ளது. பல்வேறு பகுதிகளில் முகக்கவசம் பெறுவதில் பல சிரமங்கள் உள்ளன.
மேலும் பல இடங்களில் முகக்கவசங்கள் குறைந்த தரத்துடன் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இது குறிப்பிட்ட சில மணி நேரம் மட்டும் பயன்படுத்த முடியும் என்பதால், பலர் இதனை வாங்கி அணிவதை புறக்கணிக்கத் தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் பொது மக்களின் சிரமத்தை நீக்குவதற்காகவும், முகக் கவசம் வாங்கி அணிவதை உறுதி செய்யும் வகையிலும் தூத்துக்குடி மாநகராட்சி ஐந்து ரூபாயில் முகக்கவசம் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
இதற்காக கோவையில் வடிவமைக்கப்பட்ட தனி இயந்திரம் கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன. இந்த இயந்திரம் மாநகராட்சி மைய அலுவலகம், ராஜாஜி பூங்கா, அம்மா உணவகம் அருகில் வைக்கப்பட்டது.
மேலும் 120 முகக்கவசம் கொள்ளளவு கொண்ட வகையில் இந்த இயந்திரமானது தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி, முகக்கவசம் தானியங்கி இயந்திரம் மூலம் ஐந்து ரூபாய் நாணயம் செலுத்தி, பெற்றுக்கொள்ளும் வகையில் இத்திட்டத்தை மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
இந்த இயந்திரத்தில் மூன்று லேயர் முகக்கவசம் ஐந்து ரூபாய் செலுத்தியவுடன் வருகிறது. பொது மக்களிடம் உள்ள வரவேற்பைப் பொறுத்து, மேலும் பல இடங்களில் இந்த இயந்திரம் பொருத்தப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சர் வீட்டில் பாதுகாப்பு பணியிலிருந்த காவலருக்கு கரோனா!