தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25ஆம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது வரை ஆதிச்சநல்லூரில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் குழிகள் அமைக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, ஆதிச்சநல்லூரில் தற்போது வரை 25க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு, பழங்கால மனிதர்கள் வீடு கட்டுவதற்கு பயன்படுத்திய கூரை ஓடுகள், கீறல்கள், குறியீடுகள் ஆகியவை கிடைத்துள்ளன.
தற்போது வரை கிடைத்த கீறல்கள், குறியீடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்யும்போது பழங்கால மனிதர்களின் வாழ்வியல் குறித்த முக்கியத் தகவல்கள் கிடைக்கலாம் எனவும் அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆதிச்சநல்லூர், சிவகளை அகழாய்வுப் பணிகளில் கிடைத்த முதுமக்கள் தாழிகள், எலும்பின் எச்சங்கள் ஆகியவற்றை பகுப்பாய்வுகாக மதுரை பல்கலைக்கழகத்துக்கு எடுத்துச் செல்ல தொல்லியல் துறை அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக, இன்று (ஆக. 17) காலை தொல்லியல் துறை வல்லுநர்கள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் கிடைத்த 13க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகளை, அமெரிக்க தொழில்நுட்ப வசதிகள் நிரம்பிய மதுரை பல்கலைக்கழக ஆய்வுக்கூடத்தில் வைத்து பகுப்பாய்வு செய்ய உள்ளதாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : சிவகளையில் மேலும் 2 முதுமக்கள் தாழிகள் - தோண்ட தோண்ட கிடைக்கும் அரியப் பொருள்கள்!