தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையில், கடந்த இரண்டு வருடங்களாக மாநில அரசு சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கடந்த மார்ச் மாத இறுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது. இந்த பணிகள் 29 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது.
இதற்காக சிவகளை பரம்பு மற்றும் ஸ்ரீமூலக்கரை பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தையும், ஸ்ரீ பராக்கிரமபாண்டி திரடு மற்றும் பொட்டல் கோட்டை திரடு ஆகிய பகுதியில் முன்னோர்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறியவும் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக தற்போது வரை 20 க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சிவகளை பரம்பு மற்றும் ஸ்ரீமூலக்கரையில் இதுவரை 40 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஸ்ரீ பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடந்த ஆய்வுப்பணியில், சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்ட சில்கள்,புகைப்பான், ஆட்டக்காய்கள், பாசி மணிகள், வளையல் துண்டுகள், காதணிகள், எலும்பால் செய்யப்பட்ட கூர்முனைக் கருவிகள் மற்றும் முத்திரைகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 11) சிவகளையில் முழுமையாக கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழியை திறப்பதற்காக மதுரை காமராசர் பல்கலைக்கழக மரபியல் துறைத்தலைவர் டாக்டர் குமரேசன் வருகை தந்துள்ளார். அவருடன் அகழாய்வு இயக்குநர் பிரபாகரன் ஆகியோர் முழுமையாக உள்ள முதுமுக்கள் தாழியை திறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதிலிருந்து கிடைக்கும் பழமையான பொருட்களை, காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆதிச்சநல்லூர் அகழாய்வு ; தங்க நெற்றிப்பட்டயம் கண்டெடுப்பு!