தூத்துக்குடி: தென் மாவட்டங்களில் சிறப்புப் பெற்ற ஆட்டுச் சந்தைகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் ஆட்டுச் சந்தையும் ஒன்று. இந்த ஆட்டுச் சந்தை கடந்த மூன்று மாதங்களாக கரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு ஆட்டுச்சந்தை இன்றுமுதல் (ஜூலை 10) மீண்டும் தொடங்கியுள்ளது.
இது குறித்து தகவலறிந்து வியாபாரிகளும், விற்பனையாளர்களும் அதிகளவில் குவிந்துள்ளனர்.
இங்கு தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், மதுரை தேனி ஆகிய பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
ஆனால், இன்று 2000-க்கும் குறைவான ஆடுகளே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டதால், 50 லட்சத்திற்கும் குறைவாகவே விற்பனை இருந்ததாகக் கூறப்படுகிறது
ஊரடங்கு முடிந்து தற்போது தொடங்கியுள்ள சந்தையில், வியாபாரிகளுக்குப் பெரியளவில் விற்பனை நடைபெறவில்லை எனத் தெரிகிறது.
சாதாரணமாக ஏழாயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படும் ஆடுகள், இன்று 3000 முதல் 15,000 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகியுள்ளது. வரும் நாள்களில், விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.