தூத்துக்குடி: தமிழ்நாட்டில் புதிதாக உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தென் மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழையானது பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (டிச.17) முதல் தூத்துக்குடி திருநெல்வேலி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை பெய்ததன் காரணமாக அங்குள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி, குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நகரத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
மேலும், அப்பகுதியில் இருந்த இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மழை நீரில் மூழ்கிய வீடியோ இணையத்தில் வைரலானது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீரானது காட்டாற்று வெள்ளம் போல ஓடிக் கொண்டிருந்தது. இதனால், மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான முறையில் அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சுமார் 5 அடிக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் மருத்துவமனையில் உள்ள மக்கள் வெளியில் செல்ல முடியாமலும், மருத்துவமனைக்கு வரும் மக்கள் உள்ளே செல்ல முடியாமலும் அவதி அடைந்து வருகின்றனர். வீடுகளில் தத்தளிக்கும் மக்களை படகுகள் மூலமாகவும், வாகனங்கள் மூலமாக மீட்டு பாதுகாப்பாக நிவாரண முகங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பின்னர், அண்ணா நகர் பகுதிக்கு வருகை தந்து அங்குள்ள மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு, ஆர்.பி உதயகுமார், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் கனமழை பாதிப்பு.. முகாம்களில் உள்ள மக்களுக்கு உணவு விநியோகம்!