தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள குமாரகிரியில் தனியார் பள்ளி ஒன்றில் நேற்று (ஜன.6) விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, “தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களும், தொடர் மழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
அதுமட்டுமின்றி சாலை வசதி, நீர்நிலைகள் பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ரூ.37ஆயிரம் கோடி பேரிடர் நிதியாக வழங்க வேண்டும் என்று புள்ளி விவரங்களுடன் தமிழக அரசு எடுத்து வைத்த போதிலும், மத்திய அரசு நிதி வழங்கவில்லை. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை பல்வேறு பேரிடர் ஏற்பட்ட போதிலும், மத்திய அரசு நிதி வழங்கவில்லை.
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களை மத்திய அரசு மாற்றான்தாய் மனப்பான்மையுடன் பார்க்கிறது. மழை வெள்ளம் பாதிப்புகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து எடுத்துரைத்தார். அதேபோல், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மாபெரும் புள்ளி விவரங்களுடன் மத்திய அரசுக்கு எடுத்துரைத்துள்ளனர். ஆனால், மத்திய அரசு மாற்றான்தாய் மனப்பான்மையுடன்தான் செயல்பட்டு வருகிறது.
இந்த இக்கட்டான நிதி நெருக்கடியிலும், தமிழக அரசு பொங்கல் பரிசுப் பொருட்கள் மற்றும் பொங்கல் பரிசு பணத் தொகை ரூ.1,000 அறிவித்துள்ளது. திராவிட கட்சிகள் தமிழகத்தை கடனாளி மாநிலமாக மாற்றி விட்டதாக சகோதரர் அண்ணாமலை கூறுகிறார். மத்திய அரசு நிதி கொடுத்திருந்தால் தமிழகம் ஏன் கடன் வாங்கப் போகிறது? மத்திய அரசு நிதி தரவில்லை என்பதால்தான், தமிழக அரசு கடன் வாங்கி மக்களுக்குத் தேவையான நிவாரணம், சாலை பராமரிப்பு பணிகளை செய்து வருகிறது.
நிதியும் தர மாட்டார்கள், கடனும் வாங்கக்கூடாது என்றால் எப்படி, என்ன நியாயம் என்று மக்கள் சிந்திக்க வேண்டும். இந்த அவல நிலைக்குக் காரணம், மத்தியில் உள்ள பாஜக அரசுதான்” எனக் கூறிய அவர், ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த கேள்விக்கு, அது சாத்தியமற்றது என்று கூறினார்.
இதையும் படிங்க: நவநாகரிக வாழ்க்கையால் நலிவடைந்து காணப்படும் மண்பானை தொழில்; அரசு மீட்டெடுக்க தொழிலாளர்கள் கோரிக்கை