தூத்துக்குடியில் மட்டக்கடை வடக்கு ராஜா தெருவில் ஸ்டீபன் (85) என்பவர் வசித்துவந்துள்ளார். இவர் மகள் ஷர்மிளா வெளிநாட்டில் வங்கியில் பணிபுரிந்துவருவதால், இவர் மருமகன் லிஸ்டனின் பராமரிப்பின் கீழ் இருந்துவந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு சாப்பாடு வாங்குவதற்காக லிஸ்டன் வெளியே சென்றபோது, இரவு சுமார் 8.40 மணிக்கு ஸ்டீபன் வீட்டில் இருந்து கரும்புகை வெளியே வருவதை அக்கம் பக்கத்தினர் கவனித்துள்ளனர்.
சிறிது நேரத்திலேயே வீடு முழுவதும் புகை மண்டலமாக மாறியதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் பின்புற ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டிலிருந்த குளிர்சாதனப்பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது.
தகவலன்பேரில் வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீப்பிடித்து எரிந்ததால் வெளியான கரும்புகை காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஸ்டீபன் வீட்டிற்குள்ளேயே மயங்கி விழுந்து கிடந்தைத் தொடர்ந்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டும், அது பயனலிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து உடலை கைப்பற்றிய காவல் துறையினர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.