தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கொரைரா தெரு பகுதியைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரான இசிதோர் பர்னாந்து, கடந்த 20 ஆண்டுகளாக, தனது இல்லத்தில், வருடாவருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அந்தந்த ஆண்டில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களின் பிரதிபலிப்பை எடுத்துரைக்கும் விதமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிறிஸ்மஸ் குடில் அமைத்து வருகிறார்.
குறிப்பாகப் புவி பாதுகாப்பு, இயற்கையை நேசித்தல், தீவிரவாத ஒழிப்பு, மத நல்லிணக்கம், உலக சமாதானம், தேசிய ஒருமைப்பாடு, கலைவழி - இறைமொழி, செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பிய மங்கள்யான் ஏவுகணை மூலமாக நமது பாரதத்தின் சாதனைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பண மதிப்பு நீக்க நடவடிக்கை, கரோனா பாதிப்பு மற்றும் விழிப்புணர்வு போன்ற பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளைத் தூண்டும் விதமாகக் குடில் அமைத்து வருகிறார்.
அந்த வகையில், இந்த ஆண்டு முத்து நகரின் 16வது தங்க தேர்த் திருவிழா கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி சிறப்பாகக் கொண்டாடப்பட்டதை வடிவமைத்த அவர், உலக நாடுகள் மத்தியில் இந்தியாவைத் தலைநிமிர வைக்கும் விதத்தில் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக இறங்கிய மாபெரும் நிகழ்வினையும், 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் 100% தங்கள் வாக்குப்பதிவை அளித்து, தங்கள் ஜனநாயக கடமையைச் சிறப்பாக ஆற்ற வேண்டும் என்பதையும், அரசியல் லாபத்திற்காகத் தவறான வழியில் செல்லாமல் நேர்மையுடன் வாக்களித்து நல்லாட்சி புரிபவர்களைச் சரியான வழியில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும்,
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இறைவன் தம் கரங்களினால் காக்க வேண்டியும், கிறிஸ்துமஸ் என்றாலே பகிர்தல் என்பதை நினைவு கூர்ந்து இருப்போர் அனைவரும் இல்லாதவரோடு பகிர்ந்து வாழ்ந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குச் சேவை செய்யும் தன்னார்வ தொண்டர்களை இறைவன் அதிகமாக ஆசீர்வதிக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்த இக்குடிலை வடிவமைத்துள்ளார்.
இது குறித்து, தனியார்ப் பள்ளியின் ஓவிய ஆசிரியர் இசிதோர் பர்னாந்து ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தூத்துக்குடியில் உலகப் பிரசித்தி பெற்ற பணிமயமாதா கோயிலில் தங்கத் தேர் ஓடியது. அதனை நினைவு ஓவியமாகவும், சந்திரயான் 3 விண்ணில் செலுத்தப்பட்ட காட்சி, அதே போல் தென் மாவட்டங்களில் பெய்த கன மழையின் வெள்ள பாதிப்புகள், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்குப் பதிவு செய்தால் நேர்மையான நல்லாட்சி வர முடியும் என்ற அடிப்படையிலும் குடிலை அமைத்துள்ளதாகத் தெரிவித்தார்." இந்த விழிப்புணர்வு கிறிஸ்மஸ் குடிலை ஏராளமானோர் பார்த்துப் பாராட்டிச் செல்வது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் கரை ஒதுங்கும் 'புளு டிராகன்கள்'.. கடல் உயிரின ஆர்வலர்கள் கூறுவது என்ன?