தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம் தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இதில் பாஜக இளைஞர் அணி, தொண்டர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட பல்வேறு பிரிவு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “வருகின்ற சட்டப்பேரவை தேர்தலுக்குள் பாஜக தமிழ்நாட்டில் பலம் பொருந்திய மிகப் பெரிய கட்சியாக உருவெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்களின் தற்கொலைகளை நீட்தேர்வுடன் தொடர்பு படுத்திக் கூறுவது எதிர்மறையான எண்ணங்களை விதைக்கும். எனவே நீட்தேர்வு முதல் எந்த தேர்வாக இருந்தாலும் அதை சந்திக்கின்ற மன தைரியத்தை வளர்க்கும் வகையில், மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் நேர்மறையான எண்ணங்களை மாணவர்களுக்கு வழங்கும் முயற்சிகளை எடுக்க வேண்டும்” என்றார்.
மேலும், “மத்திய அரசின் கிசான் திட்டம் எளிமைப்படுத்தப்பட்டது கொள்ளையடிப்பதற்காக அல்ல. திட்டம் எளிமைப்படுத்தப்பட்டது விவசாயிகள் இத்திட்டத்தின் பலன்களை புரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான். அதில் முறைகேடு நடந்துள்ளது என்றால் அதை சரி செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை. முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுக்கள்.
கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தலில் பாஜக நிச்சயம் போட்டியிடும். தேசிய தலைமையின் முடிவின்படி வேட்பாளர் அறிவிக்கப்படுவார். ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு, பகல் கனவாகத்தான் இருக்கும்.
இன்னும் எட்டு மாதங்களில் திமுக ஆட்சி அமைக்கும் என்று கூறும் ஸ்டாலினின் நம்பிக்கைக்கு வாழ்த்துக்கள். ஸ்டாலின் எந்த கனவு கண்டாலும் அது பகல் கனவாகவே இருப்பதற்கு இறைவன் அருள்புரிய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...'நீட் என்பது தேர்வுமல்ல, தற்கொலை என்பது தீர்வுமல்ல' - கவிஞர் வைரமுத்து இரங்கல்