கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், மண்டல வாரியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊரடங்குத் தளர்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வருகின்ற 7ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் மதுபானக்கடைகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. மதுக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கவும், மது வாங்க வருவோர் குறைந்தபட்சம் 6 அடி தூரம் இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என்பன உள்பட சில நிபந்தனைகளையும் அரசு விதித்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த முடிவு மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதனால் நோய்த்தொற்று, மேலும் அதிகரிக்கும் அபாயம் உருவாகலாம் என மனநல மருத்துவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த மனநல மருத்துவர் சிவசைலம் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "கரோனா வைரஸ் பரவல் காரணமாக 40 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்தக் காலகட்டத்தைப் பயன்படுத்தி, மது போதைக்கு அடிமையானவர்கள், அதிலிருந்து விடுவித்துக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பார்கள்.
மதுவை விட்டவர் மீண்டும் அருந்தினால் உயிருக்கு ஆபத்து:
இதற்காக மருத்துவர்களை சந்தித்து ஆலோசனைகளையும் பின்பற்றியிருக்கலாம். தற்போது, தமிழ்நாடு அரசு 7ஆம் தேதி முதல் மதுக் கடைகளைத் திறப்பதால் விளைவுகள் விபரீதமாகக் கூடிய அபாயம் உள்ளது. மதுப் பழக்கத்திலிருந்து மீள்வதற்காக, மாத்திரை, மருந்துகளை உட்கொண்டு வருபவர், மீண்டும் மதுவை அருந்தினால் அவர்களுக்கு கல்லீரல், கணையம் பாதிப்பு ஏற்படலாம். மாத்திரை மூலக்கூறுகளுடன் எதிர்வினையாற்றி மூளைக்குச் செல்லும் நரம்புகள் கூட வெடித்து சிதறி உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
மதுபானக்கடை திறப்பதால் கரோனா பரவும் அபாயம்:
மதுப் பழக்கத்திலிருந்து விடுபட்டவர், எதேச்சையாக மதுக்கடைகளை பார்க்கையில் அவர்களுடைய மனம் தானாகவே மதுவுக்குள் போய்விடும். இதை "கியூ ஸ்டேட்டஸ்" என்று கூறுவோம். மது அருந்துவதால் தொண்டையில் உள்ள கிருமிகள் இறந்துவிடும் என்று கூறுவது தவறானது. நமது கைகளை கழுவப் பயன்படுத்தும் சனிடைசர்களில் ஆல்கஹால் கலந்திருப்பது உண்மை. அதனை மருத்துவப் பெயரில், 'ஐசோ ப்ரோபைல் ஆல்கஹால்' என அழைப்பதுண்டு. இந்த ஆல்கஹாலுக்கு கிருமிகளை கொல்லும் வல்லமை உண்டு.
எத்தில் ஆல்கஹால் குடிப்பதற்கு மட்டுமே:
ஆனால், நாம் அருந்தும் ஆல்கஹாலுக்கு "எத்தில் ஆல்கஹால்" என்று பெயர். எத்தில் ஆல்கஹால் மட்டுமே குடிப்பதற்கு உகந்தது. எனவே, ஆல்கஹாலில் எண்ணற்ற வகைகள் உள்ளன. 'ஆல்கஹால்' எனப் பெயர் கொண்டதற்காக மட்டும் இரண்டும் ஒன்று ஆகாது. ஏனெனில், எத்தில் ஆல்கஹாலுக்கு கிருமிகளைக் கொல்லும் வல்லமை கிடையாது. அதை குடிப்பதனால், நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறையும். நம்மை பலவீனப்படுத்தும்.
எனவே, கரோனா நோய்த்தாக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு மதுக்கடைகளைத் திறக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ராகுல் காந்தி ஒரு ஞான சூனியம்: ஹெச். ராஜா