தூத்துக்குடியைச் சேர்ந்தவர் தமிழ்நாடு மகளிர் நலன் மற்றும் சமூகநலத் துறையின் அமைச்சர் கீதாஜீவன். இவருக்கும் தூத்துக்குடி மாநகராட்சியின் முன்னாள் மேயரும், முன்னாள் மாநிலங்களவை எம்பியும், தற்போதைய பாஜக மாநில துணைத் தலைவருமான சசிகலா புஷ்பாவுக்கும் இடையே ஏற்பட்டிருந்த வாய்ச்சண்டை தற்போது முற்றியுள்ளது என்றே கூறலாம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புத்தூரில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜகவில் பல்வேறு அணிப்பிரிவுகள் சார்பில் கடந்த டிச.11ஆம் தேதி ’மாற்றத்திற்கான மாநாடு’ நடைபெற்றது. இதில், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சொகுசு மொத்தை, பஞ்சு மொத்தை உள்ளிட்ட சொகுசுகள் நிறைந்த ரயிலில் தென்காசிக்குச் சென்றுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு அழுகிய முட்டையே வழங்கப்படுகிறது. முட்டை கொள்முதலில் ஊழல் நடந்திருக்கிறது. இதனால் அவருக்கு ‘அழுகிய முட்டை அமைச்சர்’ என பெயர் வைக்கலாம்” என பேசினார். இதனையடுத்து மறுநாள் (டிச.12) பாரதியாரின் 101வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, எட்டயபுரத்திலுள்ள பாரதியாரின் மணி மண்டபத்திலுள்ள உருவச்சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், அமைச்சர் கீதாஜீவன்.
அப்போது அண்ணாமலையின் விமர்சனம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “முட்டை கொள்முதலில் எந்த ஊழலும் நடக்கவில்லை. எல்லாம் வெளிப்படையாகத்தான் நடக்கிறது. முட்டைகளை வாகனங்களில் எடுத்து வரும்போது போக்குவரத்தின் காரணமாக ஒரு சில முட்டைகள் உடையவோ, அழுகவோ வாய்ப்பிருக்கிறது. அப்பட்டிப்பட்ட முட்டைகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்கார்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டு, நல்ல முட்டைகள் மீண்டும் பெறப்படுகின்றன. இதுதான் வழிவழியான நடைமுறை.
இது அண்ணாமலையின் மண்டையில் ஏன் ஏறவில்லை என்பது தெரியவில்லை. நேற்று அரசியலுக்கு வந்தவர், அவர். அவரது அர்த்தமற்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது” என பதிலளித்தார். அதோடு மட்டும் கீதாஜீவன் விடவில்லை. தொடர்ந்து கடந்த டிச.17ஆம் தேதி, கோவில்பட்டியில் நடந்த மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டத்திலும் அண்ணாமலையை விமர்சித்து பேசினார், கீதாஜீவன்.
அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் ரயிலில் பயணம் செய்வதை விமர்சனம் செய்கிறார் அண்ணாமலை. ஆனால், அவரது தலைவர் பிரதமர் மோடி, தனி விமானத்தில் பயணம் செய்வதை கூற மாட்டார். என்ன இதில் பித்தலாட்டத்தனம்? ஊர் ஊராக பொய்யை மட்டும் சொல்லி வருகிறார். இதோடு அவர் தேவையற்ற முறையில் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர் பேசும் மேடையில் ஏறி நாங்கள் பேச வேண்டியது வரும்” என்றார்.
இதனையடுத்து டிசம்பர் 21ஆம் தேதி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜகவின் சிறுபான்மை அணியின் சார்பாக கிறிஸ்துமஸ் விழா தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, “எங்கள் தலைவர் அண்ணாமலையை பார்த்து இத்தோடு பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் அவர் பேசும் மேடையில் நாங்களும் ஏறிப் பேச வேண்டியது வரும் என அமைச்சர் கீதாஜீவன் சொல்லியிருக்கிறார். நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும்போது உங்களுக்கு கால் இருக்காது. பேசுவதற்கு நாக்கு இருக்காது. நீங்கள் செய்யும் ஊழலை பட்டியல் போட்டு நாங்கள் சொல்லுவோம்.
சமூக நலத்துறை அமைச்சராய் இருந்து சமூகத்தை பேணவில்லை. நாகரிக அரசியல் செய்ய வேண்டும்” என சாடினார். இந்த நிலையில், மறுநாள் (டிச.22) தூத்துக்குடி, தபால்தந்தி காலனியில் உள்ள சசிகலா புஷ்பாவின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், பிளாஸ்டிக் இருக்கைகள், பூந்தொட்டிகளை உடைத்து சில மர்ம நபர்கள் கபளீகரம் செய்தனர்.
அதேநேரம் அந்த நாளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக அப்பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், சிசிடிவி கேமராக்களில் பதிவுகள் இல்லை. பின்னர் சிப்காட் காவல் துறையினரின் விசாரணையில், அருகில் உள்ள கடைக்காரர் தனது செல்போனில் படம் பிடித்ததாகவும், இதனை பார்த்த அவர்கள் செல்போனை வறுபுறுத்தி பெற்று ஆதாரத்தை அழித்ததாகவும் கூறப்பட்டது.
பின்னர் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர், சசிகலா புஷ்பாவின் வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரம் நடந்தே சென்று தூத்துக்குடி – திருநெல்வேலி பிரதான சாலையில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். பின்னர், அங்குள்ள தேவர் சிலையின் முன் கூடி கோஷம் எழுப்பி, தாக்குதலில் ஈடுபட்ட திமுவினரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
சுமார் 5 மணி நேரம் வரை இப்போராட்டம் நீடித்தது. பின்னர், தாக்குதலில் ஈடுபட்ட திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என காவல் துறையினர் உறுதியளித்தனர். இதனிடையே அதிர்ஷ்டமணி, ராமகிருஷ்ணன், இசக்கிராஜா உள்ளிட்ட 3 திமுக கவுன்சிலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆனால், ‘வழக்குப்பதிவு செய்வது மட்டும் போதாது. சம்மந்தப்பட்ட 13 பேரும் கைது செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் மறுநாளான கடந்த 23-ம் தேதி ஊர்வலமாகச் சென்று அமைச்சர் கீதாஜீவனின் வீட்டை முற்றுகையிடுவோம்’ எனச் சொல்லி பாஜகவினர் கலைந்து சென்றனர்.
இதில் 13 பேரில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. இதனையடுத்து, நேற்று (டிச.23) தேதி காலை 11 மணியளவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் கட்சியினர் ஒன்று கூடி மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதியின் தலைமையில், 400க்கும் மேற்பட்ட பாஜகவினர் அமைச்சர் கீதாஜீவனுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடியே, கீதாஜீவனின் வீட்டை முற்றுகையிட ஊர்வலமாகச் சென்றனர்.
அப்போது காவல் துறையினர் பேரிகார்டுகள் அமைத்து அவர்களை தடுக்க முயன்றும், அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். இதனால் காவல் துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேரிகார்டுகளையும் தகர்த்துவிட்டு எட்டயபுரம் செல்லும் சாலையில், கலைஞர் அரங்கம் அருகே தரையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினர்.
பின்னர், கீதாஜீவனின் வீட்டை முற்றுகையிட ஊர்வலமாகச் சென்றனர். கீதாஜீவனின் வீட்டுக்கு சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு முன்பு வரை பாஜகவினர் சென்றனர். அங்கும் காவல் துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் வந்து கட்சியின் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால், அதையும் பொருட்படுத்தாமல் முன்னேறி கீதாஜீவனின் வீட்டை நோக்கிச் செல்ல முயன்றனர். அப்போது, ‘மறியல் போராட்டம் நடத்தப் போகிறோம் எனச் சொல்லிவிட்டு, விதிகளை மீறி இப்படி நடப்பது சரியா? இதற்கு மேல் ஒரு அடி எடுத்து வைத்தால் லத்தி சார்ஜ்தான் எடுக்க வேண்டியது வரும்’ என எச்சரித்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்படுவார்கள் என எஸ்பியின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, வேனில் ஏறிச் சென்றனர்.
மேலும் இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 142 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே அமைச்சர் கீதாஜீவனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சசிகலா புஷ்பா மீது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவின் மாணவர் அணியின் வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் சீனிவாசன், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சசிகலா புஷ்பா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "கால்கள், நாக்கு இருக்காது" அமைச்சர் கீதா ஜீவனுக்கு சசிகலா புஷ்பா வார்னிங்!